Wednesday, April 12, 2017

அண்ணன்களால் ஆன உலகு

அண்ணனாகவும் மாமன்களாகவும்தான்
அறிமுகமானீர்கள்  நீங்கள்
என் பெயரை கேட்டீர்கள்
என் படிப்பை கேட்டீர்கள்
பாராட்டினீர்கள் சாக்லேட்கள் தந்தீர்கள்
என் பெற்றோரிடம் கேட்டு வண்டியில் அழைத்து சென்றீர்கள்
அனைத்தும் சந்தோஷம்தான்
பெருமைதான்
பிறிதொரு நாளில்
யாருமில்லா  வீட்டிற்கு வருகை தந்தீர்கள்
என் தனிமையில் பயத்தை போக்க
என் பொழுதுகளை நிறைக்க
நிறைந்து போனது உண்மைதான் !

அர்த்தமற்ற விளையாட்டுக்கள், தொடுதல்கள்,
பாராட்டுக்கள் என நிறைந்து போனது என் உடலும்தான்

உடலின் கிளர்ச்சிகள் பெருமைதான்
என் தோழிகளுக்கு தெரியாத
ரகசியங்கள் திறக்கப்பட்டதற்காக
அப்படியே மட்டுமாக இருந்திருக்கலாம்

இரவின் கனவுகளில் உள் புகுந்த மிருகம் ஒன்று
எனைத் தட்டி எழுப்பி
என் கண் அறியா பாகங்கள் மேல்
ரத்தத்தழும்புகள் வரைந்து போன
நொடியின் முன் வரை!!!

நீங்கா தழும்புகளுடன் வாழும்
இந்நாள் வரை!!!

Wednesday, February 24, 2016

இன்னமும் நிறைய நேரம், அப்பா!

அப்பா

இன்னமும் நிறைய நேரம் தேவைப்படுகிறது
அருகில் அமர்ந்து பேச
சேர்ந்து படங்கள் பார்க்க
ஒன்றாக பயணம் போக

நிறைய தேடல்கள் இருந்தது
போகும் திசைகளின் மேல்
சந்தேகங்கள் இருந்த காலம் உண்டு
கேள்விகள் கேட்டு பதில்கள் தெளிந்து
மறுபடியும் கேள்விகள் கேட்டு
முன்னேறி செல்ல உடன் நின்றதில்லை நீங்கள்

ஆனால் எங்கிருந்தோ நீங்கள் செலுத்திகொண்டிருந்தீர்கள்

நீங்கள் நானாக மாறி வாழ்ந்து கொண்டிருந்ததாக
உணர்ந்திருக்கிறேன்

என் மதிப்பெண்களுக்கு
என் பாடல்களுக்கு
என் ஆடல்களுக்கு
என் வெற்றிகளுக்கு
உங்கள் ஆக சிறந்த பாராட்டு புன்னகை மட்டுமே

உங்கள் வங்கியில் ஒரு நிகழ்வில் நான் பாடிய பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது
அன்று மாலை நம் வீட்டு முற்றத்தில்
அருகே அமர்ந்து மறுபடியும் பாட சொன்னீர்கள்
பாடினேன்
சிறிது நேர அமைதிக்கு பிறகு சொன்னீர்கள்
உனக்கு தேவையான பயிற்சியை என்னால் குடுக்க முடியவில்லை
அதற்கான வசதி என்னிடத்தில் இல்லை

சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டிருந்த காலம் அது
எப்போதும் போல உங்கள் வண்டிதான் என் முதல் சைக்கிள்
என்னையும் விட உயரமானது அது
உங்களை துணைக்கு அழைத்தேன்
வரவில்லை
நீயாக விழுந்து எழுந்து கற்றுகொள்
அப்போதுதான் தைரியம் வரும் என்றீர்கள்
கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்
இன்னமும்
நானாக விழுந்து எழுந்து

பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக
உங்களிடம் சொன்னேன்
என்ன படிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டீர்கள்
எனக்கு தெரியவில்லை - சொன்னேன்
அவ்வளவு நேர்மையுடன் சொன்னீர்கள்
என்னால் உன்னை மருத்துவராகவோ பொறியாளராகவோ
ஆக்கும் அளவிற்கு வசதி இல்லை
வரலாறு படி போதும் என்றீர்கள்
அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது அப்பா
எனக்கு எந்த வித குறையும் இல்லாமல்
என்னை நான் வைத்துக்கொள்ள எனக்கு அது உதவியது

கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக வந்து சொன்னேன்
எப்படி என்றீர்கள்
நானாகவே என்றேன்
அப்போதும் அந்த புன்னகை மட்டுமே

என் எழுத்துக்கள் இணைய தளங்களில் வெளி வந்து கொண்டிருந்த காலம்
அவற்றை ஒரு காகிதத்தில் கொண்டு வந்து காட்டினேன்
அப்போதும் அந்த புன்னகை மட்டுமே

புத்தகங்களிலும் தொலைக்காட்சிகளிலும்
என் முகம் வர தொடங்கிய காலம்
அப்போதும் அந்த புன்னகை மட்டுமே

உங்களுக்கு தெரியுமா அப்பா
அவற்றில் முன் நின்றது நீங்கள் மட்டுமே
நான் நீங்களாக மாறிய போது எனக்கான அங்கீகாரம்
கூடியது

இன்றும் உங்கள் மகளாக இருப்பதில்
பெருமிதம் மட்டுமே எனக்கும்

நான் படித்த புத்தகங்கள் நீங்கள் தந்தது
நான் வாழ்ந்த வாழ்க்கையின் துணிவு நீங்கள் தந்தது

நீங்கள் கடவுளை போற்றியதில்லை
செய்யும் தொழிலின் மீதான மரியாதையையே
கடவுளாக தொழுதல் உங்களால் புரிந்தது

அதிகம் படிப்பறிவில்லாத ஆங்கிலம் பேச தெரியாத
படிப்பதே பிடிக்காத
துடுக்கான மனைவியை முன்னிறுத்தி
நீங்கள் வாழ்ந்ததை நான் கேள்வியாக்கிய போது
நீங்கள் சொன்ன பதில்தான் எனக்கான சரியான ஒரு மனிதனை
தேட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது

அவளை முன்னிறுத்துவதால் நான் தாழ்ந்து போக போவதில்லை
அவளால் என் குழந்தைகள் என் குடும்பம்
முன்னேறியது என்னுடன் சேர்ந்து
எனக்கு எல்லாமாக இருந்த அவள்
என்னுடன் எல்லா நாட்களிலும் உடன் இருந்த அவள்
முன்னே நிற்கட்டுமே அதனால் என்ன?

எங்கிருந்து கற்றீர்கள் அப்பா
யாருமில்லாத சுயம்புவாக இருந்தும்
மனைவியை சக மனுஷனாக பார்க்க
எங்கிருந்து கற்றீர்கள்

சரியான தகப்பன் இல்லாமல் இருப்பினும்
நீங்கள் நம்பிய ஒன்றை பற்றி
அதில் நேர்மையை பின்பற்றி
வாழ்வில் எந்த பொறாமையும் இல்லாமல்
இருப்பதில் நிறைவாய் வாழ்ந்து
சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக மட்டுமே பார்த்து

வாழ கற்று கொடுத்தீர்கள்
நேசிக்க கற்று கொடுத்தீர்கள்
சிரிக்க கற்று கொடுத்தீர்கள்
அளவாய் கோபப்பட கற்று கொடுத்தீர்கள்
மறக்க மன்னிக்க கற்று கொடுத்தீர்கள்
பிடிக்காததிடம் இருந்து தள்ளி நிற்க கற்று கொடுத்தீர்கள்
படிக்க கற்று கொடுத்தீர்கள்
தவழ நடக்க ஓட
எல்லாமாய் நீங்கள் இருந்தீர்கள்

உங்களை பெருமிதப்படுத்த நான் எதுவும் இன்னும் செய்துவிடவில்லை
எனினும்
உங்கள் பெருமிதங்கள் வெறும் புன்னகையாக மட்டுமே வழிந்து
நிறைந்து கொண்டிருந்தது

வேண்டாம் அப்பா
எனக்கு இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும்
உங்களிடம் சொல்ல நிறைய கதைகள் உண்டு

நாம் இருவரும் சேர்ந்து
நீங்கள் எழுதிய அந்த துப்பறியும் கதையை முடிப்போம்
வாருங்கள்

நீங்கள் போதும் எனக்கு

வந்து விடுங்கள் அப்பா

Friday, March 6, 2015

வேராய் மாறும் நான்



உன் நினைவுகளின் அடுக்குகளில் நான் 
தங்கி இருப்பேனா என்று என்னுள் 
கேள்வி இல்லை 

நீ தங்கி தூங்கி போன 
என் படுக்கையின் ஓரங்களில் 
இன்னும் மிச்சம் இருக்கிறது 
உன் ஆழ முத்தங்கள் 

தனிமை என்னை அச்சுறுத்திய 
கால கட்டங்களில் அறிமுகமானவன் நீ 
இரவுகளின் சத்தங்கள் என்னை 
நடுங்க வைத்துக்கொண்டிருந்த  காலம் அது 

தைரிய போர்வை போர்த்திய 
என் தூக்கங்களில் எப்போதுமே ஈரம் 
நிறைந்திருந்திருக்கின்றது 

உன் அறிமுகம் என் தயக்கம் 
நம் பயணங்கள் 

கட்டி அணைத்து இறுக்க தோன்றிய 
உன் வியர்வை வாசம் 

அணைக்க வைத்த 
உன் ஆண்மை 

உள்ளங்கையில் தேங்கிய நீராய் 
வழிந்து எங்கே போனாய் 
நண்பனே 

நீளும் விரல்களை 
பற்றிட விழையும் போதெல்லாம் 
என் கனவுகள் எனக்கு முன்னே 
விழித்து விடுகின்றன 

போய் வா எங்கேனும் 

நீருள் வேராய் படர்ந்து 
காத்திருக்கிறேன் 
கடந்து போன நம் நிமிடங்களை 
பற்றிய படி 




Wednesday, March 4, 2015

தாகம் தீரும் பொழுது


எதுவுமே ஆரம்பம்தான்
முடிவில்லா பாதையில் 
முதல் அடிக்கான ஆர்வம் மட்டுமே 
நிஜம் 
பின் வருபவை யாரையும் தொடர விடுவதில்லை 

புது அறிமுகங்களின் முடிவில் மிச்சம் 
இருப்பவை வேற்று முகங்களே 
 எனக்கான முகம் 
அடுத்த அறிமுகங்களின் தேடலில் 

நீயா அவனா எவனோ எனும் 
கேள்வியினை பற்றிக்கொண்டு 
புது பாதை தேடுகிறேன் 
புது பயணம் நோக்கி 

வருபவன் யாராகவும் 
இருந்துவிட்டு போகட்டுமே 
என் தாகம் தீரும் வரையிலான 
பொழுது வரை! 

Saturday, April 30, 2011

நீர்க்குட காகம்





















மிக நீண்டதொரு பயணத்திற்கு
பின்னான பொழுதுகளில் உன் காமம்
கட்டுக்கடங்காமல்  என் மேல் உன்னை
விசிறி இருப்பாய்.

உன் இருப்பை நான் உணரும் முன்னமே
உன் பிறிதொரு பயணத்தையும்
தொடங்கி விடுவாய்.

உன் இருத்தலும் இறுத்தலுமாய்
காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை
மற்றொரு நாளில்
பாட்டி கதை சொன்ன நாட்களில் சொன்னாய்.

காயத் தொடங்கிய நுனி இலையின் 
ஒற்றை நரம்பில்  ஒரு சிலந்தி
மாளிகை கட்டிகொண்டிருப்பதை சொல்லி
உன்னை தடுத்து 
காட்ட விரும்பினேன்.

அசுர சிரிப்பொன்றில்
அதனை அறுத்தெறிந்து விலகி செல்கிறாய்.

பாறையின் மறைவொன்றில்
ஒரு இரவில் கதை சொல்லத் தொடங்கினாய்.
கதையின் நடுவில்
கேள்விகள் வைத்தாய். 
பதிலாய் என் ஆடை அவிழ்த்தாய்.

நெகிழும் ஆடையில்
விரல் வைத்து பிரித்து
கேள்விகளால் பிணைத்தாய்.

 நீர்க்குட காகமாய்
கேள்விகளும் பதில்களுமாய்
உனை நிறைத்துக் கொண்டாய்.

என்னுள் உன்னை ஊற்றினாய்
இல்லை
ஊற்றியதாய் எனை நம்ப வைத்தாய்.

நம்பிக்கையின் முடிவில்  
சட்டென எழுந்து
பாறையில்
தேய்த்துக் கொண்டு
மறுபடி பயணம் தொடங்கினாய்.

நிலவொளி ஆடை
உடுத்திக் கிடக்கிறேன்
சூழும் இரவின் கரங்களில்.

கேள்விகளும் பதில்களும்
பின்னி கிடக்கின்றன
என் அருகில்.

தாகம் தீராக் காளியாய்  நான் !!!

Wednesday, January 5, 2011

கரையா(ய்) நினைவுகள்













நம்பிக்கையில்தானே தொடங்கியது
அனைத்தும் ஆம் அனைத்தும்

ஒரு நொடியினில் மாறிப்போனது

இரவுகளின் நிசப்தத்தில்
அவசரமாய் எனைத் தட்டி எழுப்புகிறான்
மேலெழுந்த காமத்தின்
வேகம் தாங்காமல்

தேவை தீர்க்கும் முயக்கத்தில்
எந்த வித அலுப்பும் அவனுக்கும் இருப்பதில்லை
எனக்கும் இருப்பதில்லை

அணைக்கப்படும் விளக்குகளும்
நானும்
ஒன்றாய்த்தான் இருக்கிறோம் இந்த 
படுக்கை அறையை பொறுத்தவரை

இரவுகளில் அவனுக்கு  தேவை
இருந்தால் மட்டுமே
எழுப்பப் படுகிறோம்

வெற்று அணைப்பில்
வெந்துகொண்டுதான் இருக்கிறேன்

வேகமாய் இதழ் தேடி
பொருத்தி உணரும் முன் விலகிப் போகிறான்

காமம்  கலைந்து போனதும்
நானும் களைந்து போகிறேன்
அவனைப்  பொறுத்த வரையினில்

மகிழ்ச்சி பெருக்கினால் வடிந்த
கண்ணீர் இன்னமும்
மனதின் ஓரத்தினில் இனிக்கிறது
பதின்மத்தின் வரப்புகளில்

விலகுதல் இயல்பாய் நடந்தது உனக்கு
நீ தொட்டதும் நான் சுருங்கி விரிந்த
தொட்டாற்சிணுங்கி   நொடிப் பொழுதினில்
விலகிப் போய்விட்டாய்
விரலை ஊதிக்கொண்டு

என் சிலிர்ப்பு அதோ
உன் விரல்களில் ஒளிந்து கொண்டுதான்
இருக்கிறது

மகரந்த சேர்க்கைகளுக்காக
நான் மலர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அமிலம் ஊற்றி மூடியதாய்
மாற்றிபோனது ஏன்

இதோ அருகில்தான் இருக்கிறான்
கண் மூடி நான் கனா கண்ட
நேரத்தில்
என் கனவுக்குள் வந்து விட்டதாய்
நம்பிக்கொண்டு

என் இரவுகள் வருவதே உனக்கென்பதை
உணராமல்

என்னுள் கரைந்து ஊற்றிய
உன்னை சுவைத்துக் கொண்டு
புத்தகத்தின் மயிலிறகாய்
உன்னை ஒளித்து வைத்துள்ளேன்
என்றாவது உன்னை மீட்டெடுப்பேன்
என்ற நம்பிக்கையில்

என்றோ என்னுள் மகிழ்ந்து போன
நீ மீண்டெழுந்து வா
மறுபடியும் முகிழ்ந்து போக

தவறும் தருணங்களில்
தவமிருக்கிறேன்
என் ஆடையில் கரையாய்
மிச்சமிருக்கும் உன் நினைவுகளை
பற்றியபடி !!!!

உறக்கம் கலைத்து  தயவு செய்து
எழுந்து விடேன் !!!!!

Tuesday, December 14, 2010

மீண்டும் நான்

மிக நீண்ட நாட்களுக்கு பின்னான ஒரு பதிவு. நேரமின்மை, தனிப்பட்ட பல காரணங்கள் எழுத்து என்னை தனிமைப் படுத்தி சென்று விட்டது, அதில் இருந்து மீண்டு மீண்டும் எழுத முயற்சித்துள்ளேன்,. பார்ப்போம் இது எத்துனை நாட்கள் தொடர்கிறதென்பதை. :)