Tuesday, February 9, 2010

காத்திருக்கும் கோலம்














மெல்லிய இசைக் கோர்வையின்
ஒற்றை இழையின் ஊடே
நம் காதலின் ஓசை
தனியொரு பாதையில்
பயணம் செய்யும்

கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே

உன் மௌனங்களின் பின்னாலான
வலியினை உணர்கிறேன் எப்போதும் போல்

வலையைப் பின்னுகின்றன
சொல்லாமல் விட்டுப் போன
கடைசி முத்தங்களின்
முகவரிகள்

விரல் பின்னும்
அணைப்புகள் அந்நியப்பட்டு
நிற்கின்றன

ஒற்றைக் கேள்வியும்
அதனைச் சுற்றி வரும்
வெற்று பதில்களுமாய்
காலக் கடிகாரம் வேகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது அதன் போக்கில்

நமக்கான ஒரு கூடு
காத்திருக்கிறது
நம்மை மட்டுமே குடியேற்றம் செய்ய

யாரோ வரைந்து போன கோலம் ஒன்று
நமக்கான நல்வரவுக்காக
பூசணிப்பூ சூடிக் கொண்டிருக்கிறது

ஏதோ ஒரு நொடியின்
தரிசனத்துக்காக
என் காலங்கள் அனைத்தையும்
குவித்து வைத்து அருகில்
அமர்ந்திருக்கிறேன்

Monday, February 8, 2010

மொழியற்றக் கதறலின் ஓசை
















இரு வேறு நிழல்களின்
முயக்கத்தில் உருவானவள் நான்

இருட்டின் இறுக்கத்தை புணர்வதின்
மகத்துவம் அறிந்தவள்


விட்டுப் போகும் மேகம் துரத்தி
முடிவில்லா பாதையில் பயணிக்கிறேன்

நீள்பாதையின் தூரத்தில்
ஒற்றை நிழல் ஓங்காரமாய் திரிகிறது

நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன

நிரந்தர வலியொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
ரத்தம் பாயும்  எலும்பினுள்
குடியேறத் தொடங்கியுள்ளது

காற்று நிறையும் சுவாசப்பை
அழுக்கு சுமந்து
குமட்டுகிறது

 நானாய் மாறிப் போன
இருளொன்று
என் கண்களின் வெண்ணிறத்தில்
கருமை  பூசுகிறது

உள்நாக்கில் அரவமின்றி
நாகமொன்று படமெடுக்கிறது

எதிர் நிற்கும் என் நிழலின்
உச்சி முதல் பாதம் வரை
கூரிய பல் கொண்டு கிழிக்கிறது

கிழிக்க கிழிக்க
என் சதைக் கீறி
வெளி வருகிறது
என்னுள் நீ நட்டு விட்டுப் போன
நாளையின் விதையொன்று

துளிர்க்கும் இலையின்
நுனி தடவியபடி
கடந்த நம் இரவுகளின்
புணர்தலின் ஓசை
மொழி பெயர்ப்பின்றி