Thursday, October 9, 2008

மிச்ச சிலிர்ப்பு

எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக‌
சில சிலருக்காக‌
ப‌ல‌ என‌க்காக
‌மிக‌ப்ப‌ல‌ உன‌க்காக‌

ம‌ன‌துள் ம‌ட்டுமே உற‌வாடி
விளையாடிய‌ ப‌ல‌ க‌விதைக‌ள்
ம‌ன‌தோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த‌
பல‌ வார்த்தைக‌ள்

இன்று
தோளில் இருந்து ந‌ழுவி
இடை விட்டு இற‌ங்கிவிர‌ல் பிடித்து
ந‌ட‌ந்து ப‌டி ஏறி
உன் வீட்டுக்க‌த‌வு த‌ட்ட‌த்தொட‌ங்கி விட்டது

ஒவ்வொரு நாளும் க‌த‌வு
திற‌க்க‌ப்ப‌டும் நேர‌த்துக்காக‌

திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக

ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக

உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை

நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்

தழும்புகளின் ஈரப்பிசுபிசுப்பு
இன்னும் கைகளில்
காயாமல்

காயத்தின் ஒவ்வொரு கீறலிலும்
நம்மின் முதல் முத்தத்தின்
சுவடுகள்

என்னுள் மின்சாரம் பாய்ச்சிய
காற்றுடன் கூடிய
உதடுகளின் அணைப்பு

இன்றும் மிச்சமாய்
எனக்குள் சிலிர்க்கும்
மிருகமாய்...





மழையின் நட்பில்

ரோஜாக்கள் பூக்கும் மழைக் காலத்தில்
இருவரும் தனித்திருந்து
பனித்துளி ரசிப்போம்

எனக்கான துளியை நீயும்
உனக்கான துளியை நானும்

முட்களை தாண்டி
இதழ்களை தீண்டும் நாட்கள்

மெல்ல பனியில் மறையும்
இரவில் பெய்த பனித்துளிகள்

மெல்ல காலம் எனும்
கோடையில் காயும்..

கலைந்த எழுத்துகளில் கவிதைகள்
நிலை மாறுகின்றன..
பிரிவின் காயத்தை
காலம் மெல்லத் தின்னும்

மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய

சாயம் போன கவிதைவரிகள்
மறுபடியும் காத்திருக்கும்..
மழை கொண்டுவரும் புதிய நிறத்துக்காக..

நிச்சயம் மழை வரும் நண்பனே
புதிய நிறத்துடன்
புதிய மணத்துடன்
மிக திடமாக

கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக

மழை கழுவிய சாலையில்
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக

எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..

எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது.

நமைப் போலவே

Wednesday, August 20, 2008

சுவற்றுச் சித்திரம்

சுவரில் இருந்த கோட்டுச்சித்திரமொன்று
நேற்றைய பின்னிரவில்
தரையிறங்கி வந்திருந்தது.

முகம் மூடிய போர்வை தாண்டி
காதோரமாய் அதன் மூச்சுக்காற்று
எனை எழுப்பியது.

இரவின் கருமையில்
பளபளத்த கண்கள்
அது கடந்து வந்த
பாதையின் வெளிச்சப்புள்ளிகளை
தொட்டுணர்த்தியது.

இருவரும் மெல்ல கைகோர்த்து
கவிதை வாசிக்கத் துவங்கினோம்

வெளியில் பெய்து கொண்டிருந்த
சாரலில்
மடி சாய்ந்து உறங்க வேண்டுமாய்
கண் பார்த்து கேட்டது அச்சித்திரம்.

முகம் நனைய நானும்
தன் கோடுகள் மறைய சித்திரமும்
உறங்கத் துவங்கினோம்

உறக்கத்தின் முடிவில்
கனவு கலைந்து எழுந்து பார்த்தேன்

சித்திரத்தை சுவற்றில் காணவில்லை.

Friday, May 2, 2008

காத்திருப்பு

காமம் வடிந்த காதலின்
உச்சத்தில் ஒரு மெளனம்
உக்கிரப் புன்னகையோடு
காத்திருக்கிறது...

தனியே நடக்கும் பயணத்தின்
நடுவில் உடன் வரும்
நிழல் எனக்கு முன்பாய்
நீண்டுகொண்டே செல்கிறது..

இசைக்குறிப்புகளின் கோர்வை
முடிந்த நிமிடம்
புயலாய் உன் கேள்வி
தொடர்கிறது...

அலைகளின் சத்தத்தில்
கரைந்துபோன ஒலிக் குறிப்பொன்று
தனை விட்டுப்போன
குழலின் விலாசத்துக்காய்
அலைகிறது காற்றோடு..

மணல் வீட்டின் உச்சியில்
நிலை நிறுத்திய கொடியொன்று
உன் திசையில்
உன் பின்னோடு
மெல்லிய படபடப்போடு
உன் பாதை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது

எப்போதும் போல் தனியாய்

Friday, February 29, 2008

மின்னும் புன்னகையோடு

வெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த
ஒரு மாலை நேரத்தில்
மிக இயல்பாக நமது சந்திப்பு
நிகழ்ந்து முடிந்திருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின்
பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான்.

ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின்
முதுகில் சற்றே சாய்ந்தவாறு
அமர்ந்திருந்தாய் நீ

முகத்தில் அடித்த சாரலின்
உந்துதலில் நிமிர்ந்து பார்த்தேன்

மின்னும் புன்னகையோடு உன் கண்கள்
என்னை தொடர்ந்து கொண்டிருந்தது.

நேற்றைய நாளின் விலாசம் கேட்டாய்
நாளையின் வீடு ம‌ட்டுமே தெரிந்திருந்த‌த‌னால்
மெள‌ன‌த்தை சும‌ந்தேன்

தெருவில் அட‌ர்ந்த‌ இருட்டு வெகுவேக‌மாய்
ப‌ர‌விக்கொண்டிருந்தது.

ம‌ர‌த்தின் நிழ‌லும் அத‌னுள் ப‌துங்கிக்கொண்ட‌து.

எனை நோக்கி கை நீட்டினாய்
இர‌வு மிருக‌ம் ஒன்று எனை
இறுக்க‌மாய் போர்த்திக்கொண்ட‌து

ஒவ்வொரு நாளும் இந்த ச‌ல‌ன‌ம்
நீ ம‌ரித்துப்போன‌ நாள் முத‌லாய்

Friday, February 22, 2008

நேற்றைப் போலவே...

ஒவ்வொரு நாளும் நேற்றைப்போலவே விடிகிறது

பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை
எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை
தெருவில் காய்கறிக்காரனின் சத்தம்
விரையும் பால்காரனின் மணியோசை

எல்லாமும் நேற்றைப்போலவே இருக்கிறது

ஒவ்வொரு நாளும் உனக்காக நான்
இட்ட பொட்டு
க‌ட்டிய‌ புட‌வை
வைத்த‌ பூ
சேமித்த‌ வார்த்தைக‌ள்
ர‌சித்த‌ இசை
குவிந்த‌ காம‌ம்
எல்லாமும்

நேற்றைப்போல‌வே க‌வ‌னிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து
தின‌மும் மாலை வ‌ருகிறாய்
‍ ஒரு மாலை நீ சூட‌ காத்திருப்ப‌து தெரியாம‌ல்
சமைத்ததை உண்கிறாய்
கொதிக்கும் மூச்சின் வெப்ப‌ம் உணராம‌ல்
தொலைக்காட்சி ர‌சிக்கிறாய்
என் வ‌ளைவுக‌ளின் தீரம் பாராம‌ல்
இர‌வு வ‌ண‌க்கம் சொல்லி வேக‌மாய் உற‌ங்க‌ச் செல்கிறாய்
இர‌வின் அர்த்த‌ம் புரியாம‌ல்

இன்றைய‌ இர‌வும் நாளைக்காகவே முடிந்த‌து

சாத்திய ஜன்னல் திறக்கப்படாமலே இருக்கிறது
நேற்றைப் போலவே...

அது திறக்கப்பட காத்திருக்கிறது
நாளை இரவுக்காக மறுபடியும்...

நேற்றைப் போலவே...

Saturday, February 9, 2008

தேங்கும் விழிக‌ள்

விடியும் வரை நீளும் இரவை
சுவைக்கும் கனவுகள்
கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின்
ம‌றைவில் ம‌னித‌ முக‌ங்க‌ள்

சொல்லும் சொல்லின் ச‌த்த‌ம்
காற்றோடு க‌ரைந்துவிடுகிற‌து

சொல்லாத‌வை ச‌ற்றுமுன் சுவைத்த‌
ஆழ் முத்த‌த்தின்
முக‌த்து வ‌டுவாய்

வ‌க்கிர‌ம் நிறைந்த‌ க‌ண்ணாய்
கோப‌ம் விடைக்கும் மூக்காய்
உயிர் கிழிக்கும் நாவாய்

எல்லாமாய்
ப‌திந்துவிடுகிறது

சுற்றிப்பார்க்க‌ வ‌ரும் கூட்ட‌ம்

ஒரு சார‌லில் கிள‌ம்பும் வாச‌னையாய்
மெல்ல‌ப் ப‌ர‌வுகிற‌து அறையினுள்

பெரும‌ழை விட்டுச்சென்ற‌
சாலையோர‌ த‌ண்ணீர் தேங்க‌லாய்

போகும் வாக‌ன‌ங்க‌ளின் க‌றுப்பு ஜ‌ன்ன‌ல்க‌ள் அறியுமோ
தேங்கும் நீரில் வாழும் விழிக‌ளை

Saturday, February 2, 2008

விரையும் குதிரை

இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன‌
நினைவு எறும்புகள்

ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.

நடக்கும் போதே தூங்கிப்போன குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட
உன் ஞாபக எச்சங்கள்

உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்

கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்

உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்

விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்

கனவில் நீந்தும் கள்வன்

கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்
ஏந்தும் தோளுக்காய் பசியுடன்...


இமை மீறி நீந்தும் நீருடன்...

Thursday, January 24, 2008

கவிதை கடக்கும் கோப்பை

பருகி எச்சில் வைத்து மிச்சமாக்கப்படுகின்றன
கடந்து போன கவிதைகள்

அதனுள் மித‌க்கும் க‌ண்ணிழ‌ந்த‌ ஈ ஒன்று
கோப்பையின் ஓர‌த்தில் நின்று
துடுப்பு தேடுகிற‌து

தான் ப‌ருகிய‌ ஒற்றைத்துளியே
ச‌முத்திர‌மென‌
ம‌ய‌க்க‌ம் கொண்டு
பான‌த்தின் வ‌ண்ட‌ல் குறையென்கிற‌து

தொலைதூர‌ விழி மூல‌ம்
கிட்ட‌ப்பார்வை பார்த்த‌ப‌டி

த‌ன் தோணி க‌ட‌க்கும்
மாயை அறியாத‌து அது

அருகில் செல்லும் க‌ப்ப‌லின்
க‌ட‌ல் மித‌க்கும் வித்தை
க‌ற்றுக்கொடுக்க‌ கையில்
கோல் எடுக்கிற‌து

எடுக்கும் கோலுக்கு ஆடும் ம‌ந்தியென‌
என் க‌விதை நினைத்து...

அது அறியாதது

கையிடுக்கின் வழி மெல்ல கசியும்
புகையாய் கவிதை

அந்திவான் நோக்கி திசையற்று
உலகை அணைத்து
பறக்கும் சேதி

பிர‌ச‌வ‌ங்க‌ள்

நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
க‌விதைப் பிர‌ச‌வ‌ங்க‌ள்

சில‌ சுக‌மாய் சில‌ குறையாய்

ர‌த்த‌ம் காணா சிசு வெளியே வ‌ருவ‌தில்லை
எத்துணை கால‌மாயினும்

உல‌க‌ம் காணும் வேக‌ம் இருப்பினும்
சில‌ ச‌ம‌ய‌ம் உள்நின்று செல்ல‌மாய்
இர‌ட்டைப் பிர‌ச‌வ‌த்துக்காய்
அட‌ம் பிடிப்ப‌வை சில‌

வெளியில் எடுத்து
த‌லை க‌விழ்த்து முதுகு த‌ட்டிய‌பின்
க‌ண் சொருகி
ம‌ரித்த‌வை சில‌

உயிர‌ற்று ஜ‌ட‌மாய்
மெல்ல‌ சுவாசித்து
தாதியின் கைசூட்டில்
த‌ன் உயிர்சூட்சும‌ம் தேடி
வெளிவ‌ந்த‌வை சில‌

புதிதாய் முளைத்த‌
சின்ன‌ஞ்சிறு கை கால்க‌ளுட‌ன்
ப‌னிக்குட‌ நீரில் மித‌ந்த‌ப‌டி
த‌ன் நேர‌த்துக்காய்
காத்திருப்ப‌வை சில‌

எனினும் நித்த‌மும்
நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
க‌விதைப் பிர‌ச‌வ‌ங்க‌ள்

கவிதைப்பயணி

எடுப்பார் கைப்பிள்ளையாய் சிறு சிணுங்கலுடன்
தனது பயணத்தின் இலக்கு நோக்கி
புகைவிட்டபடி போய்க்கொண்டிருக்கிறது
வார்த்தைப் பெட்டி.

நகர்ந்து போன கள்ளிச்செடியொன்றின்
அரும்பொன்று மொட்டவிழ்த்து
தலை அசைக்கிறது தாண்டிப்போன காற்றுக்கு
முத்தமிட்டு

தூர நின்ற ஒற்றைப் பனைமரம்
தனது கள்ளை இறக்கி வைத்து
எதிர்நோக்கி நிற்கிறது
வார்த்தை போதைக்காய்.

பனைக்கள் நக்கி
மகரந்த சேர்க்கை மறந்து
தள்ளாடி
மலர் மலராய் தாவிச் செல்கிறது
திசை மறந்த வண்ணத்துப்பூச்சியொன்று

சிரித்து வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது
என் சொல் அமர்ந்த
அரளிப்பூவொன்று..

அதனோடு சேர்ந்து காயும்
காத்திருக்கிறது
தனை பறிக்கும் வளைக்கையொன்றுக்காய்

எனக்கான‌ கேள்விகள்

விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.

மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்

வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.

நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.

நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க

உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது

மோன தவம் மரத்தடியில்

எதிர்வரும்
வேட்டுவ அம்பு நோக்கி

Wednesday, January 23, 2008

என் காதல் காடு

இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்

தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு ம‌ட்டும்
காத்துக்கொண்டு இருக்கிற‌து மிச்ச‌மான‌ வ‌லியோடு

கான‌க‌த்தின் ந‌டுவில் ஓர் ஒற்றைக்குர‌ல்
தின‌ந்தோறும் பாடுகிற‌து
கேட்ப‌வ‌ர் இல்லாம‌ல்

க‌ட்டிய‌ணைத்து முத்த‌ம‌ழை பொழிந்து
சூடு த‌ணிவித்த‌ என் உட‌ல்கூடு
த‌ன்னைத்தானே கொளுத்திக்கொள்கிற‌து

த‌ன் ர‌த்த‌ம் சுவைக்கும்
ப‌சித்த‌ நாயாய்

Friday, January 18, 2008

சொல்லியிருக்கலாமோ

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உனது நினைவாக நானும்
எனது செயலாக நீயும்
பயணித்தபோதும்

கைகோர்க்காமல் விலகி
மனம் கோர்த்து
நடைபயின்றபோதும்

இமை தட்டிய உறக்கம்
வேடிக்கை பார்த்தபடி
பேசிச் சலித்தபோதும்

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உதடு வரை வந்து
உள் சென்ற‌
உனக்கான என் வார்த்தை
குரல்வளை நெரிக்கும் வரை

Thursday, January 17, 2008

பயணத்தின் ஊடே

முகம் தெரியா தூரத்திலும்
உள்ளம் உணரும் உணர்வுகள்
அனைத்தையும் சொல்லிவிட முடியா தவிப்புடன்
நகரும் ரயில் பயணமாய் வாழ்க்கை...

ஒவ்வொரு திருப்ப‌த்திலும்
ஜ‌ன்ன‌லோர‌மாய் தெரியும்

விழிக‌ள் தோறும் க‌ன‌வுக‌ள்
நீளும் தண்டவாளத்தில் தொலைக்கப்பட்ட‌உறவுகள்...

விடியும் காலை எனக்கானதான நம்பிக்கை

என் விரல் தேடி கோர்க்கும்
நட்பின் கரங்கள்...
கனவின் விழிப்பில் தினமும் நிகழும்
சந்திப்பின் பிம்பங்கள்...

பிம்பங்கள் கலையும் நிமிடங்கள்

அடுத்த ரயிலின் துவக்கம்.....

Tuesday, January 8, 2008

தனிமை விருந்தாளி

என் முன் விழும்
நிழல் துரத்தி வேகமாய் ஓடினேன்
உயிர்ப்பையில் காற்று தேக்கி
நிமிர்ந்து பார்த்தேன்
நிழலைக் காணவில்லை...

வென்ற களிப்புடன் பின் திரும்ப
எனைத் துரத்தும் மிருகம்
தரையில் நெளியும்.

வீடு வந்து சேர்ந்தேன்
உடலில் மேய்ந்த புழுக்களை உதறி..

எனக்கும் முன்
என் தனிமை விருந்தாளி
தலைவாழை இலை விரித்து
உணவாய் எனை உண்டபடி

எனை நோக்கி தன்
கோரப்பல் நீட்டும்.

மழுங்கடிக்கப்பட்ட என் தேவதை

அணைக்க நீளும் கைகள்
வெட்டப்பட்டிருக்கின்றன.
கனிவு பொழியும் கண்கள்
குருடாக்கப்பட்டிருக்கின்றன.
என் தோட்டம் அளக்கும்
கால் விரல்களின் நகங்கள்
பிடுங்கப்பட்டிருக்கின்றன.

சபிக்கப்பட்ட
என் தேவதையின் தலையும்
என் தேவனின் ஆண்மையும்
மழுங்க வழிக்கப்பட்டிருக்கின்றன

சாணை பிடிக்கப்படாத
ஒரே கத்தியினால்....

Thursday, January 3, 2008

சிலுவை ஏந்தும் கருவறை

உன் வீழ்ச்சியை என் முதுகில் ஏற்றி
சிலுவைக் கூடு சுமந்து பயணிக்கிறேன்
மெல்ல நகரும் நத்தையாய்
என் ஓடுடைக்கும்
கரம் தேடி
பாலைவன மணலின் சூட்டில்...
ஏந்தும் கரம் தோறும்
இது இறுதி எனும்
நம்பிக்கை கதகதப்பின் சுகம்
எனினும் பயணம் தொடர்கிறது
நெடுந்தொலைவு சூரியன்
உதிக்கும் திசை தேடி...

Wednesday, January 2, 2008

நாமும் அவனும்

சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

என் நீ

பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்...
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்....

உறையும் என் இரத்தம்

உனக்கான கோப்பையில்
வடியும் என் இரத்தம்
சிறிது சிறிதாக
சேமிக்கப்படுகிறது ஒவ்வொரு நொடியும்...
நீளும் உன் இரட்டை நாக்குகளில்
அதன் சூடு
உறைக்கும் வண்ணம்
தன்னைத்தானே கொதிக்க வைத்துக்கொள்கிறது..