Thursday, December 31, 2009

வலி சுமக்கும் வழி















வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில்  உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது

Monday, December 21, 2009

சிறகெரியும் வெண்புறா
















உனக்கும் எனக்கும் இடையில்
ஒரு மெல்லிய வெண்புறா
பறந்து கொண்டே இருக்கிறது
இடம் வலமாய்
சோர்வு இல்லாது இலக்கில்லாது

நீ எனக்காய் சேர்த்து வைத்த
காமம் என் மூக்கின் நுனியில்
சிந்தி விட்டு செல்கிறது

அதன் சிறகின் ஓசைக்கும்
சிலிர்ப்பவளாக நானும்
அதன் உடலின் ருசிக்காக
காத்திருப்பவனாக  நீயும்


என் சிறகெரித்து எனக்கான வானம்
தயார் செய்கிறாய்
எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்

பொசுங்கும் சிறகிலிருந்து
உன் கூட்டுக்கான வண்ணம் அடிக்கிறாய்

கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே

கனவுகளில்தான் என் காமம்
கொழுந்து விட்டு எரிகிறது
பரவசமூட்டும் இடம் தேடி
என் விரல் அலைகிறது

ஏதோ சாதித்து விட்டதாய்
ஒவ்வொரு இயங்குதலின் முடிவில்
பெருமையாய் முகம் பார்க்கிறாய்
உள்ளுக்குள் பொங்கும்
எச்சிலை எனக்குள்ளேதான்
நான் உமிழ்ந்து கொள்ளுகிறேன்
உனைப்பார்த்து சிரித்தபடியே

 எத்தனை முறை எரித்தாலும்
மீண்டும் பிறக்கிறது
ஒவ்வொரு விடியலிலும்

பதின்ம வயதில் தோன்றி
இன்றும் பறக்கும் என் வெண் புறா

Saturday, December 19, 2009

பிரார்த்தனை

இந்த ஒரு வாரம் மிகப் பெரிய சவால் எனக்கு. எனது வாழ்நாளில் நான் பேசாமல் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் இன்று அந்த சரித்திரம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க நான் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் நான் எப்போதும் பேசவேண்டும் என்றால். பார்ப்போம். தொண்டையில் இருக்கும் ஒரு சிறு பிரச்சினையினால் ஒரு வாரம் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. நண்பர்களே உங்களுக்கு எல்லாம் இந்த ஒரு வாரம் ரெஸ்ட். அடுத்த வாரம் வருவோம்ல :)


எவ்வளவு விளையாட்டாக பேசினாலும் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே உள்ளது. பிரார்த்தனையை மட்டுமே நம்பியுள்ளேன்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி கேட்டுள்ளேன் அலுவலகத்தில். பார்ப்போம். இந்த வாரம் நிறைய படிக்கவும் கேட்கவும் முடிவு செய்துள்ளேன். ஏதாவது நல்ல வீடியோ, ஆடியோ இருந்தால் அனுப்பி வைக்கவும் அல்லது டவுன்லோட் செய்ய சிபாரிசு செய்யவும்.  (gmail id : anuradan@gmail.com)

நன்றி.

Wednesday, December 16, 2009

நாமும் அவனும்
















 




சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

 ---- 2008 -ல் நான் எழுதிய கவிதை. என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த  கவிதை.

Tuesday, December 15, 2009

காசி - எரியூட்டுபவனின் பயணம்















சவங்கள் சிவமாகும் நதியின்
கரையில் நிற்கிறேன்
எரியூட்டப்படும் உடல்களின்
கதகதப்பு வேண்டி

கரையோர இடிபாடுகள் உள்ளேதான்
எனக்கான உணவு சமைத்து
ஆறிக்கொண்டிருக்கிறது

கையில் தடி கொண்டு காத்திருக்கிறேன்
வெப்பம் தாளாமல் எழுந்து
நடனமாடும் உயிரற்றவைகளின்
உடல்கள் அடித்து
உலையில் தள்ள

நிலவு வளரும் ஒரு நடு நிசியின்
நிசப்தத்தில்
மூழ்கடிக்கப்பட்ட பிணங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்து வரத் தொடங்கின
என் தனிமையை பகிர்ந்து கொள்ள

நாங்கள் பேசத் தொடங்கினோம்
ஒவ்வொருவராய்
தங்கள் வாழ்க்கையை
தங்கள் ஏமாற்றத்தை
வெற்றியை நினைத்த தோல்வியை
பகிர்ந்து கொண்டோம்

கடந்து செல்லும் பிணங்களை
வேடிக்கை பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
தோள் கை போட்டு

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்
கண்ணுக்கு எட்டாத எல்லையின்
பின்புறம் ஒரு உலகம்
இருப்பதாய்ச் சொன்னார்கள்

கைப் பிடித்து அழைத்து செல்வதை
உறுதி கூறினார்கள்
அழைப்பினூடே அவர்களுடன்
நடக்கத் தொடங்கினேன்
 நதி மேல்

காலைக்குள் திரும்பி வந்து விட வேண்டிய
அவசரம் இருந்தும்
நடந்து கொண்டிருக்கிறேன்
காலைக்குள் திரும்பி வராவிடில்
என் தடி எனை அடித்து
உலையில் தள்ளி விடும்

ஒவ்வொரு இரவும் இப்படித்தான்
நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறேன்
என் தடியும் அமைதியாய்
அருகில் அமர்ந்திருக்கிறது
எனக்கான உடல்களும்
நான் எரியூட்ட காத்திருக்கின்றன

பட்டாம்பூச்சி வாழ்க்கை

















வளைந்து நெளிந்து செல்லும்
பாதையாகத்தான் போய்க் கொண்டிருந்தது
வாழ்க்கை.

திடீரென வந்த ஒரு திருப்பத்தில்தான்
உணர்ந்தேன் வளைவும் நெளிவும்
கடைசியாக முடிந்த வடிவம்
கேள்விக்குறி

வானவில் வர்ணம் என் மேலும்
அடிக்கப்படுகிறது
இரவு விளக்குகளின் ஜாலத்தில்
எனில்
பகல் நேர வர்ணம் என்னவோ
சிவப்பாக மட்டும் இருக்கிறது


ஒவ்வொரு இரவின் முடிவிலும்
பொங்கிப் பிரவாகமாகியது
பல காதல்கள்

நான் பத்தினியாவதும் பரத்தையாவதும்
பக்கத்தில் படுப்பவனின்
போதை நிலை பொறுத்தே இருக்கிறது

ஒரு நாள் சீதை -
                 அடிக்கடி தீக்குளிக்க வேண்டியதில்லை எவனுக்காகவும்
ஒரு நாள் கண்ணகி -
                 கால் சலங்கை கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும் 
ஒரு நாள் மாதவி -
                துறவியாக வேண்டியதில்லை வந்து போகும் எந்த நாடோடிக்காகவும்

இப்படியே இருந்து விட்டு போகிறேனே
ஏன் கல் எறிகிறாய்
காதலின் பெயர் சொல்லி

வர்ணிப்பின் எல்லையைத் தொட்டு விட்டு
என்னையும் தொட்டுவிட்டு மட்டும்
போன பலரோடு நீயும்
போய்விடு

வண்டி நிறைய பாரம் ஏற்றி உள்ளேன்
காதலின் பெயர் சொல்லி
இனிமேல் கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்

மரத்தும் மறந்தும் போன
வாழ்வின் ஸ்பரிசங்கள்
சவமாய்ப் போன பிறப்புகள்

நான் இறக்கும்  தருணத்தில் மட்டும்
என் தலையணை தூக்கிப் பார்

உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல்  நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன்

காரணம் சொல்லி கடந்து போனாய்
நான் உன்னுள் காற்றாய் கலந்து
போனதறியாமல்

இன்னும் எத்தனையோ காதல்
வைத்திருக்கிறேன்

உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்

Friday, December 11, 2009

தேநீர் அருந்தும் நினைவுகள்




இறுக்கிப் பிடித்த கைகளின்
விரல் வழியே
வழிந்து சென்றுவிடுகிறாய்
ஒவ்வொரு அணைப்பின் இறுதியிலும்

அடர்ந்த காட்டின்
நடுவே பற்றி எரிகிறது
உனக்காய் நான் பதுக்கி வைத்த
ஒற்றைக் கதவு

விரையும் வாகனங்கள் நிறைந்த
பாதையில் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
உனக்காய் ஒரு
முத்தத்தை விட்டுச் செல்கிறேன்

அவ்வப்போது
உன் வாகனத்தையோ
உன் ஆடையையோ உதறிப் பார்த்துக்கொள்
எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும்
என் விடியலின் மிச்சங்கள்

நீ திரும்பும் வழிதனில்
நிறைய காற்றிருப்பதாய்
தலை கேசம் சரி செய்துகொள்கிறாய்
உன்னைத் தொடரும் என் சுவாசம்
உன்னை அறியாமல் தான்
பின் தொடரும்
நீ அறியாமல் உன் மேல் பொழியும்

மாலை நேரங்கள்
தங்கள் நிறம் இழந்து
ஊதாநிறப் பூ பூக்கின்றன
முழங்கால்கள் துவண்டு போகின்றன
நீ வந்து அழைப்பு மணி அழுத்தும் நேரம்

இதயம் சற்றே நின்று
எனைத் தட்டி பார்க்கிறது
உள்ளுக்குள்
ஒரு ஆணி தானே கழண்டு விடுகிறது

விரல் சொடக்கெடுத்து
கனவுகள் பகிர்கிறோம்
தொடர்ந்து வந்த
காற்றின் கரங்களை கட்டி வைக்கிறோம்
நினைவுகளை விலாசம் மாற்றி
அனுப்பி வைக்கிறோம்
கண்களுக்குள் காதலை
காமம் பற்றி எரிதலோடு சேர்த்து
படம் பிடித்தோம்

ஒருவருக்கு ஒருவர்
பாடம் எடுத்தோம்
பாடம் படித்தோம்

விடியும் வேளை உடை மாற்றி
உடை மாற்றினோம்
மெல்லிய சிரிப்போடு
மறுபடியும் மாற்றினோம்

வாழ்ந்து கொண்டே இருந்தோம்
விருட்சமாய் மாறிப் போனது
நம் காதல் நாமறியாமலே

ஒரு மழைக்கால நீண்ட கருஞ்சாலையில்
தனித்திருந்து  தேநீர் அருந்தும்
என்னிடம் மிச்சம் இருப்பது
சாலை கழுவிய
மழையின் சாரல்கள் மட்டுமே
விருட்சத்தின் விழுதுகள் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
கடந்தவையின் விதைகள்

Tuesday, December 8, 2009

நிழலாகிப் போன அவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக





















பகல்களின் மீதான
நடுக்கம் இன்றும்
குறையவில்லை அவளுக்கு

இரவுகளில் மட்டுமே
தன் கை விரல்களை தானே
பார்க்கிறாள் அவள்

இருட்டு அறைகளுக்குள்
தன்னைத் தானே பூட்டிக் கொள்கிறாள்
கண்ணாடியில் கூட
தன் பிம்பம் தெரிந்து விடாத படிக்கு

மேலே மேலே சுற்றப்பட்ட
இரவு ஆடைகளில் மட்டுமே
அந்த அறைகளுக்கும்
வலம் வருகிறாள்

அவனால் அடிக்கடி
கசக்கப்பட்ட தன்
சிறு வயது ஆடைகளை
கால்களில் கட்டி வைத்துள்ளாள்

ஒவ்வொரு முறையும்
அவசரம் அவசரமாக அவனால்
தரையில் விரிக்கப்பட்டு
அதனையும் மீறி
சிந்தியதைத் துடைத்து


நனைந்து நனைந்து
நிறம் மாறிப் போன
அவளது உள் பாவாடைகள்
அந்த அறை சட்டங்களில்
இன்றும் கிழிந்து தொங்குகின்றன

ஏதாவது உடையில் இருந்து
அவனால் கருவாக்கப்பட்ட
ஏதோ ஒன்று வெளி வந்துவிடும் என்ற
பதட்டம் அவள் கண்களில்
தெரிந்து கொண்டுதான் இருக்கிறது

உடைகளை சதா நேரமும்
உதறிய படியே நடக்கிறாள்
சிதறுபவைகளை 
பிய்ந்து போன செருப்புகளால்
மிதித்து அழிக்கிறாள்

அழித்த படி நடந்து கொண்டே
இருக்கிறாள்
நடந்த படியே உண்கிறாள்
நடந்த படியே தூங்குகிறாள்
நடந்த படியே வாழ்கிறாள்

படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு

ஜன்னலுக்கு வெளியிலான வாழ்க்கை


















நீண்ட பெரிய சத்திரத்தின்
இருட்டு மூலையில்
ஏதோ ஒரு சிணுங்கல் ஒலி
இருந்துகொண்டேதான் இருக்கிறது


பெருக்காமல் விட்டுப் போன
ஒரு திரை அரங்கின்
ஏதாவது ஒரு நாற்காலிக்கு
கீழே கசக்கிப் போட்ட
ஈரக் காகிதம் நகர்ந்து
சென்றுவிட வழிதெரியாமல்
வாசமின்றி
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
அடுத்த நாள் காலை வரை

நீலப் படம் ஓடும்
அந்த தியேட்டரில்
இரவுக்காட்சிக்கு டிக்கெட்
குடுக்கும் அவனின்
மகளையும் அதே போன்றதொரு
படம் பார்த்தவன்தான்
இலவசமாய் கசக்கி
முகர்ந்திருப்பான் 

டிக்கெட் வாங்க
பணம் இல்லாமல் போஸ்டர்
பார்த்தவன்
இதையாவது இலவசமாக
பார்த்திருப்பான்

சாலையோரச் சண்டையில்
விலக்கி விடுவதை விட
விலகும் நேரம் தெரியும்
அவளின் ரவிக்கையின் ஈரம்
கதகதப்பாய் இருக்கிறது
சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு

கூடும் வரைக்
காத்திருந்துவிட்டு
முழு முயங்குதலில்
கல் எறிந்து சந்தோசப்படுகிறார்கள்
துணையின் உச்ச நேரத்தில்
எப்போதும் எழுந்து செல்பவர்கள்


இன்னும் வேடிக்கை பார்ப்பவர்கள்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்

அது
மரணமோ
கற்பழிப்போ
ஆடை அவிழ்ப்போ
கூடலோ அது எதனுடையதாக இருந்தாலும்

தன் ஜன்னலுக்கு வெளியே

Friday, December 4, 2009

துளிர்க்கும் இலை





















உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்

உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை

என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை

ஒரு பேருந்து பயணத்தில்
தோள் சாய்த்து
காதோரமாய் கனவைச்
சொல்லச் சொன்னாய்

சுற்றி நின்ற உலகம் மறந்து
நம் குழந்தைக்கான பேர் சூட்டினோம்

உன் மூச்சுக் காற்று
பட்டு தாண்டி செல்லும் போதெல்லாம்
அடி வயிற்றில் ஆசையாய்
ஒரு அவஸ்தை

இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக

இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து

நம்பிக்கை
















நம்பிக்கையின் மீதான
நம்பிக்கை சிறிது சிறிதாக
குறைந்து கொண்டே வருகிறது

வலிகளும் வாலிகளும் நிறைந்த
கானகமாக உள்ளது வாழ்க்கை
எந்த மரத்தின் பின்
எவன் ஒளிந்திருப்பானோ
இல்லை
எது ஒளிந்திருக்குமோ
தெரியவில்லை

சந்தர்ப்பங்களுக்காக
எதன் பின்னாவது காரணம்  சொல்லி
மறைந்து போகிறார்கள் மனிதர்கள்

கூடவே நடந்து வரும் நிழல்
திடீரென காணாமல் போகிறது

உள்ளுணர்வு பல நேரங்களில்
சரியாகத்தான் இருக்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
வாசகம் உரைக்கும்போது

அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
நிதர்சனமாக உள்ளது

மழை குளித்த மரத்தின்
அடியில் தங்கும்போதும்
உணர்வின் வெப்பம் எரித்தபடியே
இருக்கிறது

காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

என் உள்ளங்கை முழுதும்
அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்
மெல்ல முன்னேறுகிறது

தேன் எடுப்பதாய் சபதம் போட்டு
காணாமல் போன வண்டொன்று
வெகு நேரமாய் உள்ளே
சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது

நடக்கும் பாதை நீண்டு கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு பயணத்திலும்

Thursday, December 3, 2009

கனவுக்குள் கனவாய்

ஒவ்வொரு புணர்தலின்
முடிவிலும் உனக்கு திருப்தியா
என்ற கேள்வியோடு ஆடை புனையத்
தொடங்குகிறேன்

என்னின் உச்சம் உணர்ந்ததில்லை
நான்
அதற்கான கேள்வியும் உன்னுள்
வந்ததில்லை

உடை களைதலில் நீ காட்டும்
அவசரம் ஒவ்வொரு வேளையிலும்
ஒரு கேள்வியாக மட்டுமே நின்று போயிருந்தது 

இரவுகள் இன்னுமொரு
நரகமாக மாறத் தொடங்கிய
நாட்களின் இறுதியில்
அவன் புதியதாய்
பூக்கத்தொடங்கினான்

என் பாடல்கள் அவனுக்காய்
புது சுவரம் கோர்க்கத் தொடங்கின

என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின

என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின

மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்

வாடும் முன் அள்ளியெடுத்து
அவன் அணைப்பதாய்
கனவுகள் கண்டேன்

அவன் என்னை மெதுவாய்
மிக மெதுவாய்
ஸ்வரம் பிரிக்கத் தொடங்குகிறான்

என் விரல்கள் அவன் தொடலுக்காய்
ஏங்கி மருதாணி சாயம்
பூசியது

என் வருகையை அவனுக்கு
அறிவிக்க மட்டுமே
கால்கள் கொலுசணிந்து
நடக்கத் தொடங்கியது

மறுபடியும் விடிந்து விட்டது
என் கனவுக்குள் சென்று
உறங்கத் தொடங்கி விட்டான் அவன்