Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 30, 2011

நீர்க்குட காகம்





















மிக நீண்டதொரு பயணத்திற்கு
பின்னான பொழுதுகளில் உன் காமம்
கட்டுக்கடங்காமல்  என் மேல் உன்னை
விசிறி இருப்பாய்.

உன் இருப்பை நான் உணரும் முன்னமே
உன் பிறிதொரு பயணத்தையும்
தொடங்கி விடுவாய்.

உன் இருத்தலும் இறுத்தலுமாய்
காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை
மற்றொரு நாளில்
பாட்டி கதை சொன்ன நாட்களில் சொன்னாய்.

காயத் தொடங்கிய நுனி இலையின் 
ஒற்றை நரம்பில்  ஒரு சிலந்தி
மாளிகை கட்டிகொண்டிருப்பதை சொல்லி
உன்னை தடுத்து 
காட்ட விரும்பினேன்.

அசுர சிரிப்பொன்றில்
அதனை அறுத்தெறிந்து விலகி செல்கிறாய்.

பாறையின் மறைவொன்றில்
ஒரு இரவில் கதை சொல்லத் தொடங்கினாய்.
கதையின் நடுவில்
கேள்விகள் வைத்தாய். 
பதிலாய் என் ஆடை அவிழ்த்தாய்.

நெகிழும் ஆடையில்
விரல் வைத்து பிரித்து
கேள்விகளால் பிணைத்தாய்.

 நீர்க்குட காகமாய்
கேள்விகளும் பதில்களுமாய்
உனை நிறைத்துக் கொண்டாய்.

என்னுள் உன்னை ஊற்றினாய்
இல்லை
ஊற்றியதாய் எனை நம்ப வைத்தாய்.

நம்பிக்கையின் முடிவில்  
சட்டென எழுந்து
பாறையில்
தேய்த்துக் கொண்டு
மறுபடி பயணம் தொடங்கினாய்.

நிலவொளி ஆடை
உடுத்திக் கிடக்கிறேன்
சூழும் இரவின் கரங்களில்.

கேள்விகளும் பதில்களும்
பின்னி கிடக்கின்றன
என் அருகில்.

தாகம் தீராக் காளியாய்  நான் !!!

Wednesday, January 5, 2011

கரையா(ய்) நினைவுகள்













நம்பிக்கையில்தானே தொடங்கியது
அனைத்தும் ஆம் அனைத்தும்

ஒரு நொடியினில் மாறிப்போனது

இரவுகளின் நிசப்தத்தில்
அவசரமாய் எனைத் தட்டி எழுப்புகிறான்
மேலெழுந்த காமத்தின்
வேகம் தாங்காமல்

தேவை தீர்க்கும் முயக்கத்தில்
எந்த வித அலுப்பும் அவனுக்கும் இருப்பதில்லை
எனக்கும் இருப்பதில்லை

அணைக்கப்படும் விளக்குகளும்
நானும்
ஒன்றாய்த்தான் இருக்கிறோம் இந்த 
படுக்கை அறையை பொறுத்தவரை

இரவுகளில் அவனுக்கு  தேவை
இருந்தால் மட்டுமே
எழுப்பப் படுகிறோம்

வெற்று அணைப்பில்
வெந்துகொண்டுதான் இருக்கிறேன்

வேகமாய் இதழ் தேடி
பொருத்தி உணரும் முன் விலகிப் போகிறான்

காமம்  கலைந்து போனதும்
நானும் களைந்து போகிறேன்
அவனைப்  பொறுத்த வரையினில்

மகிழ்ச்சி பெருக்கினால் வடிந்த
கண்ணீர் இன்னமும்
மனதின் ஓரத்தினில் இனிக்கிறது
பதின்மத்தின் வரப்புகளில்

விலகுதல் இயல்பாய் நடந்தது உனக்கு
நீ தொட்டதும் நான் சுருங்கி விரிந்த
தொட்டாற்சிணுங்கி   நொடிப் பொழுதினில்
விலகிப் போய்விட்டாய்
விரலை ஊதிக்கொண்டு

என் சிலிர்ப்பு அதோ
உன் விரல்களில் ஒளிந்து கொண்டுதான்
இருக்கிறது

மகரந்த சேர்க்கைகளுக்காக
நான் மலர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அமிலம் ஊற்றி மூடியதாய்
மாற்றிபோனது ஏன்

இதோ அருகில்தான் இருக்கிறான்
கண் மூடி நான் கனா கண்ட
நேரத்தில்
என் கனவுக்குள் வந்து விட்டதாய்
நம்பிக்கொண்டு

என் இரவுகள் வருவதே உனக்கென்பதை
உணராமல்

என்னுள் கரைந்து ஊற்றிய
உன்னை சுவைத்துக் கொண்டு
புத்தகத்தின் மயிலிறகாய்
உன்னை ஒளித்து வைத்துள்ளேன்
என்றாவது உன்னை மீட்டெடுப்பேன்
என்ற நம்பிக்கையில்

என்றோ என்னுள் மகிழ்ந்து போன
நீ மீண்டெழுந்து வா
மறுபடியும் முகிழ்ந்து போக

தவறும் தருணங்களில்
தவமிருக்கிறேன்
என் ஆடையில் கரையாய்
மிச்சமிருக்கும் உன் நினைவுகளை
பற்றியபடி !!!!

உறக்கம் கலைத்து  தயவு செய்து
எழுந்து விடேன் !!!!!

Tuesday, December 14, 2010

வார்த்தை தேடும் முகவரிகள்





உன் முகவரியில் சேர இயலாமல்
சேர்க்க முடியாமல்
திரும்பி விட்ட
கடிதங்கள் அவை

வெற்றுக் கடிதங்களுடைய வார்த்தைகள்
தானே உருப்பெறுகின்றன
எந்த வித உரிமையும் உறவும் கொள்ளாமல்
நமக்கிடையே அவை கிடந்து
தவிக்கின்றன


வார்த்தைகள் அவைகளாகவே வாழ்ந்து
விடுவதில்லை
அவை உருப்பெறுகின்றன
உயிர்பெற்று


கடந்த நாட்களின் வலிகள்
காதலின் ரணங்கள்
காமத்தின் காயங்கள்
இவை மட்டுமே கொண்டு அவை
தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன

முகங்கள் மறந்து இந்த தெருவில்
அவை உனக்காக காத்திருந்தன

வேகமாக நகரும் மனிதர்களின்
சுவாசக் காற்றில் அடையாளம் தேடி
ஒவ்வொரு சுவாசத்தினையும்
அடைகாத்திருக்கிறது
வேனிற் காலக்காற்று

கடந்து போன ஒவ்வொரு காலடிகளும்
ஏதோ ஒரு விதத்தில்
பிரிவினை பலமாய் அழுந்த
சொல்லிக் கொண்டிருந்தன


ஒரு வெய்யில் காலத்தில்
முடிவானது நம் பிரிவு
அந்த நொடியில் முதல் வார்த்தை
கடிதத்தில் பதிந்தது - அது மட்டும் அல்ல
முதல் வலியும் பதிந்தது
ஞாபகத்தில் இருந்து


எங்காவது காத்திருக்கும் என் கடிதம்
உனக்காகவென நான்
அகழ்ந்தெடுத்த வார்த்தைகள் தாங்கி
தங்களுக்குள் விவாதம் நிகழ்த்திக்கொண்டு

உரையாடல்கள் தீரும் வேளையில்
அவை முகவரி தேடிக்
கிளம்புகின்றன

அடைய முடியா தூரத்தில்
உனக்கென ஒரு கூட்டை
நீ தேடிக் கொள்கிறாய்
நான் அறிய முடியாதென நம்பி

நம்பிக்கைதானே நம்முள் எல்லாமே !!!!

Saturday, July 31, 2010

உயிர்த்தெழுதல்














இருட்டின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறோம்
மெல்லிய இசை சுற்றிலும் அடர்ந்திருக்கிறது

நேற்றிரவு தொடங்கிய பயணம் அது
மரங்கள் பேசும் ஓசை மட்டும் கேட்டபடி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
எங்களின் நிழல்களோடு

சுற்றிலும் இரவின் இசை
வழி நடத்திக் கொண்டிருக்கிறது எங்களை

அமைதியின் கணம் தாங்க இயலாத
நொடியில் தீர்மானித்தோம்
இறந்து போவதென்று


எடுத்த முடிவின் படி
ஒருவர் இன்னொருவரை
உண்ணத் தொடங்கினோம்


பயணத்தின் முதல் நொடி போல
கைகளில் இருந்து
தொடங்கினோம்

விரல் இழந்த உள்ளங்கைகளில்
மெல்லியதாய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டோம்

மிச்சமிருந்த காதல் பிடுங்கி
கிளைகளில் மாட்டி வைத்தோம்
அடையாளத்திற்காக  


இன்னும் பேச்சுத் தொடங்கியாக வில்லை

திடீரென உணர்ந்தோம்
பின் வந்த நிழல் காணாமல் போனதை

பல காதலின் சாயல்
இதயத்தின் உள் புகுதலை உணர்ந்தோம்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம்

சட்டென மரத்தின் கிளைகளில் இருந்து
நாங்கள் இறங்கிப் போவதை பார்த்தோம்
கடந்து வந்த வழியில்

எனினும் பயணம் முடியவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுகிறது
எங்களின் உண்ணுதலும்
உண்ணுதலின் நடுவே நடையும்


மீண்டும் எங்கள் படுக்கையில்
நாங்கள் உயிர்த்தெழுந்தோம்
விரல் இல்லா உள்ளங்கைகளோடு

Friday, May 28, 2010

முதல் காதல் கடிதம்

இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்

எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்

முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன

மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன

எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்

தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்

கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்

இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்

இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்

மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்

தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்

காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!

Tuesday, March 23, 2010

சிவமெரிக்கும் நான்



















வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை

தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்

எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்

வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே

எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்

மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன் 
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது

செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது

சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்

என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்

நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி

நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்

காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்

கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்

மனிதம் தேடி தவம் தொடர்கிறது

மறுபடி ஒரு பயணம்















நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்
நான்

Thursday, March 4, 2010

நெரிக்கும் இழப்பு




















 சிநேகிதிகளின் வீடுகளுக்கு செல்வதில்
பெரும் தயக்கம் வருகிறது
இப்போதெல்லாம்
வார விடுமுறை நாட்களின் மேல்
கோபம் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை

இயல்பாகக் கூட
அவர்களின் கணவர்களை பற்றி
விசாரிக்க இயல்வதில்லை

"நன்றாக இருக்கிறாயா" என்பதுடன்
கேள்விகள் முடிந்து விடுகிறது

தோழி ஒருத்தியின்
குழந்தைப் பேறு பற்றி
இன்னொரு தோழியின் மூலம் மட்டுமே
தெரிந்து  கொள்ள வேண்டியுள்ளது

சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது

சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
 திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது

வார்த்தைகள் மாறி
கண் ஜாடைகள்
அதிகம் பரிமாறுகிறது
மூடப் பட்ட கதவுகளின் பின்னால்

இயல்பாய் இருக்க நடித்தல்
கழுத்தை நெரிக்கிறது

கணவனை இழத்தல் அத்துணை பாவமா?

உயிரோடோ அல்லது இல்லாமலோ!!!

வீழும் நினைவுகள்




















வாழ்வின் விளிம்பில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வெறுமையின் கணங்கள்

நகர்ந்து கொண்டிருக்கும்
பேருந்து ஜன்னல்களில்
நம் நேரங்கள் காற்றில்
சலசலத்துக் கொண்டிருக்கிறது

திருமண மண்டபத்தின் சத்தத்தில்
மௌனக் கேவல்கள்
கரைந்து போய்க் கொண்டிருக்கிறது

பரிமாறப்பட்ட பந்தியில்
உணவோடு சேர்த்து
உணர்வுகளும் அனைத்தும்
வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்


சுற்றி நிற்கும் உறவுகளில்
உன்னைத் தேடிக் கொண்டுதான் உள்ளது
வாய் விட்டு சொல்ல முடியாத
நம் நினைவுகள்

விழுந்து கொண்டிருக்கிறேன்
விரல் பற்ற முடியாத ஆழத்தில்
விடை தெரியா வினாக்கள் சூழ்ந்த
அந்த காரத்தில்

எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்

Monday, February 8, 2010

மொழியற்றக் கதறலின் ஓசை
















இரு வேறு நிழல்களின்
முயக்கத்தில் உருவானவள் நான்

இருட்டின் இறுக்கத்தை புணர்வதின்
மகத்துவம் அறிந்தவள்


விட்டுப் போகும் மேகம் துரத்தி
முடிவில்லா பாதையில் பயணிக்கிறேன்

நீள்பாதையின் தூரத்தில்
ஒற்றை நிழல் ஓங்காரமாய் திரிகிறது

நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன

நிரந்தர வலியொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
ரத்தம் பாயும்  எலும்பினுள்
குடியேறத் தொடங்கியுள்ளது

காற்று நிறையும் சுவாசப்பை
அழுக்கு சுமந்து
குமட்டுகிறது

 நானாய் மாறிப் போன
இருளொன்று
என் கண்களின் வெண்ணிறத்தில்
கருமை  பூசுகிறது

உள்நாக்கில் அரவமின்றி
நாகமொன்று படமெடுக்கிறது

எதிர் நிற்கும் என் நிழலின்
உச்சி முதல் பாதம் வரை
கூரிய பல் கொண்டு கிழிக்கிறது

கிழிக்க கிழிக்க
என் சதைக் கீறி
வெளி வருகிறது
என்னுள் நீ நட்டு விட்டுப் போன
நாளையின் விதையொன்று

துளிர்க்கும் இலையின்
நுனி தடவியபடி
கடந்த நம் இரவுகளின்
புணர்தலின் ஓசை
மொழி பெயர்ப்பின்றி

Friday, January 15, 2010

பிய்ந்து தொங்கும் என் பொம்மை




















அமைதியாய் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

விரல் நகங்கள் பூசப்பட்ட சாயத்தின்
சுவடுகளை இழந்து கொண்டிருக்கிறது

நிழல்கள் நிஜங்களாய் எதிரில்
நடனமாடிக்கொண்டிருக்கிறது

மனவறையில் இறுக்கிப் பூட்டப்பட்ட
நினைவுகள் எழும்பிக்கொண்டிருக்கிறது
தளும்பும் காயங்களின் தழும்புகளோடு

துரத்துவதைத் திரும்பிப் பார்க்காமல்
விரைந்து கொண்டிருந்திருக்கிறேன்

புதுப் புது வலிகள்
படிப்பித்திருக்கப் பட்டிருக்கிறது
கட்டாயமாய் 

நான் கேட்காமலே
எனை ஆட்கொண்டிருக்கிறது

ஒரு சோம்பலான மதிய வேளையில்
உனைத் தேடி உன் அறைக்கு
வந்திருந்தேன் வீட்டிற்குத்  தெரியாமல்

நீ இல்லா உன் அறையின்
வெறுமை தாங்காமல் வெளியேறினேன்

வழி காட்டுவதாய்த்தானே சொன்னார்கள்
பின் ஏன் அந்த
இருட்டுக் குடிசையில்
தள்ளினார்கள்

வலிக்கிறது
என் உடல் முழுதும்
உருவம் அருவமாய் படர்ந்திருக்கிறது
ஏதோ ஒன்று

வலி சொன்னாலும் மரத்துப் போன
செவிகள் மடல் வைத்து
மூடிக் கொண்டிருந்திருக்கிறது

கைகள் மட்டும் தங்கள் வேலையை
இயல்பாய் தொடர்ந்திருக்கிறது

ஒரு கை
இல்லாத என் முலை
தேடி அழுத்திவிட்டு
கொண்டிருந்திருக்கிறது

இன்னொரு கை
உறுதியாய் நின்ற 
தன் எழுச்சியை தடவிக்கொண்டபடி
பெருமையுடன்

பிரியாத இடம் பிரித்து
உள் நுழைய எத்தனிக்கும் ஒருவன்

பிரிந்த உதடு வழியே
உயிர் உறிஞ்சியவாறே  ஒருவன்

கடந்த பாதை சுவட்டின் சூடு
ஆறும்முன் மீண்டும் மீண்டும்
காதில் கேட்கிறது
அலறல் சத்தம் மட்டும்

இரவுகளில் தனி ஆவர்த்தனம் ஆடுகிறது
விரல்கள் உடல் வழியே
இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு

இன்றும்
அமைதியைத் தான் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

 -  இது உண்மையிலேயே உண்மையாய் நடந்த ஒரு சம்பவம்.

Thursday, December 31, 2009

வலி சுமக்கும் வழி















வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில்  உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது

Wednesday, December 16, 2009

நாமும் அவனும்
















 




சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

 ---- 2008 -ல் நான் எழுதிய கவிதை. என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த  கவிதை.

Tuesday, December 15, 2009

காசி - எரியூட்டுபவனின் பயணம்















சவங்கள் சிவமாகும் நதியின்
கரையில் நிற்கிறேன்
எரியூட்டப்படும் உடல்களின்
கதகதப்பு வேண்டி

கரையோர இடிபாடுகள் உள்ளேதான்
எனக்கான உணவு சமைத்து
ஆறிக்கொண்டிருக்கிறது

கையில் தடி கொண்டு காத்திருக்கிறேன்
வெப்பம் தாளாமல் எழுந்து
நடனமாடும் உயிரற்றவைகளின்
உடல்கள் அடித்து
உலையில் தள்ள

நிலவு வளரும் ஒரு நடு நிசியின்
நிசப்தத்தில்
மூழ்கடிக்கப்பட்ட பிணங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்து வரத் தொடங்கின
என் தனிமையை பகிர்ந்து கொள்ள

நாங்கள் பேசத் தொடங்கினோம்
ஒவ்வொருவராய்
தங்கள் வாழ்க்கையை
தங்கள் ஏமாற்றத்தை
வெற்றியை நினைத்த தோல்வியை
பகிர்ந்து கொண்டோம்

கடந்து செல்லும் பிணங்களை
வேடிக்கை பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
தோள் கை போட்டு

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்
கண்ணுக்கு எட்டாத எல்லையின்
பின்புறம் ஒரு உலகம்
இருப்பதாய்ச் சொன்னார்கள்

கைப் பிடித்து அழைத்து செல்வதை
உறுதி கூறினார்கள்
அழைப்பினூடே அவர்களுடன்
நடக்கத் தொடங்கினேன்
 நதி மேல்

காலைக்குள் திரும்பி வந்து விட வேண்டிய
அவசரம் இருந்தும்
நடந்து கொண்டிருக்கிறேன்
காலைக்குள் திரும்பி வராவிடில்
என் தடி எனை அடித்து
உலையில் தள்ளி விடும்

ஒவ்வொரு இரவும் இப்படித்தான்
நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறேன்
என் தடியும் அமைதியாய்
அருகில் அமர்ந்திருக்கிறது
எனக்கான உடல்களும்
நான் எரியூட்ட காத்திருக்கின்றன

பட்டாம்பூச்சி வாழ்க்கை

















வளைந்து நெளிந்து செல்லும்
பாதையாகத்தான் போய்க் கொண்டிருந்தது
வாழ்க்கை.

திடீரென வந்த ஒரு திருப்பத்தில்தான்
உணர்ந்தேன் வளைவும் நெளிவும்
கடைசியாக முடிந்த வடிவம்
கேள்விக்குறி

வானவில் வர்ணம் என் மேலும்
அடிக்கப்படுகிறது
இரவு விளக்குகளின் ஜாலத்தில்
எனில்
பகல் நேர வர்ணம் என்னவோ
சிவப்பாக மட்டும் இருக்கிறது


ஒவ்வொரு இரவின் முடிவிலும்
பொங்கிப் பிரவாகமாகியது
பல காதல்கள்

நான் பத்தினியாவதும் பரத்தையாவதும்
பக்கத்தில் படுப்பவனின்
போதை நிலை பொறுத்தே இருக்கிறது

ஒரு நாள் சீதை -
                 அடிக்கடி தீக்குளிக்க வேண்டியதில்லை எவனுக்காகவும்
ஒரு நாள் கண்ணகி -
                 கால் சலங்கை கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும் 
ஒரு நாள் மாதவி -
                துறவியாக வேண்டியதில்லை வந்து போகும் எந்த நாடோடிக்காகவும்

இப்படியே இருந்து விட்டு போகிறேனே
ஏன் கல் எறிகிறாய்
காதலின் பெயர் சொல்லி

வர்ணிப்பின் எல்லையைத் தொட்டு விட்டு
என்னையும் தொட்டுவிட்டு மட்டும்
போன பலரோடு நீயும்
போய்விடு

வண்டி நிறைய பாரம் ஏற்றி உள்ளேன்
காதலின் பெயர் சொல்லி
இனிமேல் கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்

மரத்தும் மறந்தும் போன
வாழ்வின் ஸ்பரிசங்கள்
சவமாய்ப் போன பிறப்புகள்

நான் இறக்கும்  தருணத்தில் மட்டும்
என் தலையணை தூக்கிப் பார்

உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல்  நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன்

காரணம் சொல்லி கடந்து போனாய்
நான் உன்னுள் காற்றாய் கலந்து
போனதறியாமல்

இன்னும் எத்தனையோ காதல்
வைத்திருக்கிறேன்

உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்

Friday, December 11, 2009

தேநீர் அருந்தும் நினைவுகள்




இறுக்கிப் பிடித்த கைகளின்
விரல் வழியே
வழிந்து சென்றுவிடுகிறாய்
ஒவ்வொரு அணைப்பின் இறுதியிலும்

அடர்ந்த காட்டின்
நடுவே பற்றி எரிகிறது
உனக்காய் நான் பதுக்கி வைத்த
ஒற்றைக் கதவு

விரையும் வாகனங்கள் நிறைந்த
பாதையில் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
உனக்காய் ஒரு
முத்தத்தை விட்டுச் செல்கிறேன்

அவ்வப்போது
உன் வாகனத்தையோ
உன் ஆடையையோ உதறிப் பார்த்துக்கொள்
எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும்
என் விடியலின் மிச்சங்கள்

நீ திரும்பும் வழிதனில்
நிறைய காற்றிருப்பதாய்
தலை கேசம் சரி செய்துகொள்கிறாய்
உன்னைத் தொடரும் என் சுவாசம்
உன்னை அறியாமல் தான்
பின் தொடரும்
நீ அறியாமல் உன் மேல் பொழியும்

மாலை நேரங்கள்
தங்கள் நிறம் இழந்து
ஊதாநிறப் பூ பூக்கின்றன
முழங்கால்கள் துவண்டு போகின்றன
நீ வந்து அழைப்பு மணி அழுத்தும் நேரம்

இதயம் சற்றே நின்று
எனைத் தட்டி பார்க்கிறது
உள்ளுக்குள்
ஒரு ஆணி தானே கழண்டு விடுகிறது

விரல் சொடக்கெடுத்து
கனவுகள் பகிர்கிறோம்
தொடர்ந்து வந்த
காற்றின் கரங்களை கட்டி வைக்கிறோம்
நினைவுகளை விலாசம் மாற்றி
அனுப்பி வைக்கிறோம்
கண்களுக்குள் காதலை
காமம் பற்றி எரிதலோடு சேர்த்து
படம் பிடித்தோம்

ஒருவருக்கு ஒருவர்
பாடம் எடுத்தோம்
பாடம் படித்தோம்

விடியும் வேளை உடை மாற்றி
உடை மாற்றினோம்
மெல்லிய சிரிப்போடு
மறுபடியும் மாற்றினோம்

வாழ்ந்து கொண்டே இருந்தோம்
விருட்சமாய் மாறிப் போனது
நம் காதல் நாமறியாமலே

ஒரு மழைக்கால நீண்ட கருஞ்சாலையில்
தனித்திருந்து  தேநீர் அருந்தும்
என்னிடம் மிச்சம் இருப்பது
சாலை கழுவிய
மழையின் சாரல்கள் மட்டுமே
விருட்சத்தின் விழுதுகள் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
கடந்தவையின் விதைகள்

Tuesday, December 8, 2009

நிழலாகிப் போன அவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக





















பகல்களின் மீதான
நடுக்கம் இன்றும்
குறையவில்லை அவளுக்கு

இரவுகளில் மட்டுமே
தன் கை விரல்களை தானே
பார்க்கிறாள் அவள்

இருட்டு அறைகளுக்குள்
தன்னைத் தானே பூட்டிக் கொள்கிறாள்
கண்ணாடியில் கூட
தன் பிம்பம் தெரிந்து விடாத படிக்கு

மேலே மேலே சுற்றப்பட்ட
இரவு ஆடைகளில் மட்டுமே
அந்த அறைகளுக்கும்
வலம் வருகிறாள்

அவனால் அடிக்கடி
கசக்கப்பட்ட தன்
சிறு வயது ஆடைகளை
கால்களில் கட்டி வைத்துள்ளாள்

ஒவ்வொரு முறையும்
அவசரம் அவசரமாக அவனால்
தரையில் விரிக்கப்பட்டு
அதனையும் மீறி
சிந்தியதைத் துடைத்து


நனைந்து நனைந்து
நிறம் மாறிப் போன
அவளது உள் பாவாடைகள்
அந்த அறை சட்டங்களில்
இன்றும் கிழிந்து தொங்குகின்றன

ஏதாவது உடையில் இருந்து
அவனால் கருவாக்கப்பட்ட
ஏதோ ஒன்று வெளி வந்துவிடும் என்ற
பதட்டம் அவள் கண்களில்
தெரிந்து கொண்டுதான் இருக்கிறது

உடைகளை சதா நேரமும்
உதறிய படியே நடக்கிறாள்
சிதறுபவைகளை 
பிய்ந்து போன செருப்புகளால்
மிதித்து அழிக்கிறாள்

அழித்த படி நடந்து கொண்டே
இருக்கிறாள்
நடந்த படியே உண்கிறாள்
நடந்த படியே தூங்குகிறாள்
நடந்த படியே வாழ்கிறாள்

படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு

ஜன்னலுக்கு வெளியிலான வாழ்க்கை


















நீண்ட பெரிய சத்திரத்தின்
இருட்டு மூலையில்
ஏதோ ஒரு சிணுங்கல் ஒலி
இருந்துகொண்டேதான் இருக்கிறது


பெருக்காமல் விட்டுப் போன
ஒரு திரை அரங்கின்
ஏதாவது ஒரு நாற்காலிக்கு
கீழே கசக்கிப் போட்ட
ஈரக் காகிதம் நகர்ந்து
சென்றுவிட வழிதெரியாமல்
வாசமின்றி
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
அடுத்த நாள் காலை வரை

நீலப் படம் ஓடும்
அந்த தியேட்டரில்
இரவுக்காட்சிக்கு டிக்கெட்
குடுக்கும் அவனின்
மகளையும் அதே போன்றதொரு
படம் பார்த்தவன்தான்
இலவசமாய் கசக்கி
முகர்ந்திருப்பான் 

டிக்கெட் வாங்க
பணம் இல்லாமல் போஸ்டர்
பார்த்தவன்
இதையாவது இலவசமாக
பார்த்திருப்பான்

சாலையோரச் சண்டையில்
விலக்கி விடுவதை விட
விலகும் நேரம் தெரியும்
அவளின் ரவிக்கையின் ஈரம்
கதகதப்பாய் இருக்கிறது
சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு

கூடும் வரைக்
காத்திருந்துவிட்டு
முழு முயங்குதலில்
கல் எறிந்து சந்தோசப்படுகிறார்கள்
துணையின் உச்ச நேரத்தில்
எப்போதும் எழுந்து செல்பவர்கள்


இன்னும் வேடிக்கை பார்ப்பவர்கள்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்

அது
மரணமோ
கற்பழிப்போ
ஆடை அவிழ்ப்போ
கூடலோ அது எதனுடையதாக இருந்தாலும்

தன் ஜன்னலுக்கு வெளியே

Friday, December 4, 2009

துளிர்க்கும் இலை





















உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்

உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை

என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை

ஒரு பேருந்து பயணத்தில்
தோள் சாய்த்து
காதோரமாய் கனவைச்
சொல்லச் சொன்னாய்

சுற்றி நின்ற உலகம் மறந்து
நம் குழந்தைக்கான பேர் சூட்டினோம்

உன் மூச்சுக் காற்று
பட்டு தாண்டி செல்லும் போதெல்லாம்
அடி வயிற்றில் ஆசையாய்
ஒரு அவஸ்தை

இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக

இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து

நம்பிக்கை
















நம்பிக்கையின் மீதான
நம்பிக்கை சிறிது சிறிதாக
குறைந்து கொண்டே வருகிறது

வலிகளும் வாலிகளும் நிறைந்த
கானகமாக உள்ளது வாழ்க்கை
எந்த மரத்தின் பின்
எவன் ஒளிந்திருப்பானோ
இல்லை
எது ஒளிந்திருக்குமோ
தெரியவில்லை

சந்தர்ப்பங்களுக்காக
எதன் பின்னாவது காரணம்  சொல்லி
மறைந்து போகிறார்கள் மனிதர்கள்

கூடவே நடந்து வரும் நிழல்
திடீரென காணாமல் போகிறது

உள்ளுணர்வு பல நேரங்களில்
சரியாகத்தான் இருக்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
வாசகம் உரைக்கும்போது

அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
நிதர்சனமாக உள்ளது

மழை குளித்த மரத்தின்
அடியில் தங்கும்போதும்
உணர்வின் வெப்பம் எரித்தபடியே
இருக்கிறது

காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

என் உள்ளங்கை முழுதும்
அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்
மெல்ல முன்னேறுகிறது

தேன் எடுப்பதாய் சபதம் போட்டு
காணாமல் போன வண்டொன்று
வெகு நேரமாய் உள்ளே
சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது

நடக்கும் பாதை நீண்டு கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு பயணத்திலும்