Friday, February 29, 2008

மின்னும் புன்னகையோடு

வெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த
ஒரு மாலை நேரத்தில்
மிக இயல்பாக நமது சந்திப்பு
நிகழ்ந்து முடிந்திருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின்
பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான்.

ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின்
முதுகில் சற்றே சாய்ந்தவாறு
அமர்ந்திருந்தாய் நீ

முகத்தில் அடித்த சாரலின்
உந்துதலில் நிமிர்ந்து பார்த்தேன்

மின்னும் புன்னகையோடு உன் கண்கள்
என்னை தொடர்ந்து கொண்டிருந்தது.

நேற்றைய நாளின் விலாசம் கேட்டாய்
நாளையின் வீடு ம‌ட்டுமே தெரிந்திருந்த‌த‌னால்
மெள‌ன‌த்தை சும‌ந்தேன்

தெருவில் அட‌ர்ந்த‌ இருட்டு வெகுவேக‌மாய்
ப‌ர‌விக்கொண்டிருந்தது.

ம‌ர‌த்தின் நிழ‌லும் அத‌னுள் ப‌துங்கிக்கொண்ட‌து.

எனை நோக்கி கை நீட்டினாய்
இர‌வு மிருக‌ம் ஒன்று எனை
இறுக்க‌மாய் போர்த்திக்கொண்ட‌து

ஒவ்வொரு நாளும் இந்த ச‌ல‌ன‌ம்
நீ ம‌ரித்துப்போன‌ நாள் முத‌லாய்

Friday, February 22, 2008

நேற்றைப் போலவே...

ஒவ்வொரு நாளும் நேற்றைப்போலவே விடிகிறது

பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை
எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை
தெருவில் காய்கறிக்காரனின் சத்தம்
விரையும் பால்காரனின் மணியோசை

எல்லாமும் நேற்றைப்போலவே இருக்கிறது

ஒவ்வொரு நாளும் உனக்காக நான்
இட்ட பொட்டு
க‌ட்டிய‌ புட‌வை
வைத்த‌ பூ
சேமித்த‌ வார்த்தைக‌ள்
ர‌சித்த‌ இசை
குவிந்த‌ காம‌ம்
எல்லாமும்

நேற்றைப்போல‌வே க‌வ‌னிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து
தின‌மும் மாலை வ‌ருகிறாய்
‍ ஒரு மாலை நீ சூட‌ காத்திருப்ப‌து தெரியாம‌ல்
சமைத்ததை உண்கிறாய்
கொதிக்கும் மூச்சின் வெப்ப‌ம் உணராம‌ல்
தொலைக்காட்சி ர‌சிக்கிறாய்
என் வ‌ளைவுக‌ளின் தீரம் பாராம‌ல்
இர‌வு வ‌ண‌க்கம் சொல்லி வேக‌மாய் உற‌ங்க‌ச் செல்கிறாய்
இர‌வின் அர்த்த‌ம் புரியாம‌ல்

இன்றைய‌ இர‌வும் நாளைக்காகவே முடிந்த‌து

சாத்திய ஜன்னல் திறக்கப்படாமலே இருக்கிறது
நேற்றைப் போலவே...

அது திறக்கப்பட காத்திருக்கிறது
நாளை இரவுக்காக மறுபடியும்...

நேற்றைப் போலவே...

Saturday, February 9, 2008

தேங்கும் விழிக‌ள்

விடியும் வரை நீளும் இரவை
சுவைக்கும் கனவுகள்
கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின்
ம‌றைவில் ம‌னித‌ முக‌ங்க‌ள்

சொல்லும் சொல்லின் ச‌த்த‌ம்
காற்றோடு க‌ரைந்துவிடுகிற‌து

சொல்லாத‌வை ச‌ற்றுமுன் சுவைத்த‌
ஆழ் முத்த‌த்தின்
முக‌த்து வ‌டுவாய்

வ‌க்கிர‌ம் நிறைந்த‌ க‌ண்ணாய்
கோப‌ம் விடைக்கும் மூக்காய்
உயிர் கிழிக்கும் நாவாய்

எல்லாமாய்
ப‌திந்துவிடுகிறது

சுற்றிப்பார்க்க‌ வ‌ரும் கூட்ட‌ம்

ஒரு சார‌லில் கிள‌ம்பும் வாச‌னையாய்
மெல்ல‌ப் ப‌ர‌வுகிற‌து அறையினுள்

பெரும‌ழை விட்டுச்சென்ற‌
சாலையோர‌ த‌ண்ணீர் தேங்க‌லாய்

போகும் வாக‌ன‌ங்க‌ளின் க‌றுப்பு ஜ‌ன்ன‌ல்க‌ள் அறியுமோ
தேங்கும் நீரில் வாழும் விழிக‌ளை

Saturday, February 2, 2008

விரையும் குதிரை

இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன‌
நினைவு எறும்புகள்

ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.

நடக்கும் போதே தூங்கிப்போன குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட
உன் ஞாபக எச்சங்கள்

உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்

கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்

உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்

விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்

கனவில் நீந்தும் கள்வன்

கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்
ஏந்தும் தோளுக்காய் பசியுடன்...


இமை மீறி நீந்தும் நீருடன்...