Friday, October 23, 2009

அழைப்பு மணி

நேற்றுதான் முதல் முறையாக‌
ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன்
என் வீட்டில் மாட்டி வைக்க‌
ஒரு அழகிய கிளியும்
இரு மணிகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு
அமைக்கப்பட்ட மணி அது



மிக நீண்ட நாள்
நெடுங்கனவு அது எனக்கு



ஒரு சதுர முற்றமும்
சிறிய‌ ச‌மைய‌ல‌றையும்
என‌க்கு ம‌ட்டுமேயான‌ ப‌டுக்கை அறையும்
நான்கு இலைக‌ள் ம‌ட்டும் செடியை கொண்ட‌
என் வீட்டிற்கான‌
அழைப்பு ம‌ணி அது



எங்கு அழைப்பு ச‌த்த‌ம் கேட்டாலும்
தானாக‌ திரும்பி பார்ப்ப‌து
இய‌ல்பாகி விட்ட‌
ஒரு நொடியின் முடிவில் தோன்றிய‌து
என் வீட்டுக்கும் தேவையான
ச‌த்த‌த்தின் ஒலி
குடிபோதையில் உன்னால்
த‌ட்டியும்
உதைத்தும்
உடைக்கப்பட்டுவிட்ட‌ க‌த‌வு
இனிமேல் என்னைப்போலவே அழாது
காய‌ங்க‌ளை சும‌ந்து



உன‌க்கான‌ ம‌ர‌ண‌ம்
கதவற்ற‌ வாச‌லில் கைக‌ட்டி வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிற‌து
அத‌ற்கான‌ ஒலியை ப‌திவு செய்ய‌



அழைப்பு மணி ச‌த்த‌ம் கேட்ட‌தும்
க‌த‌றி அழ‌ ஒத்திகை
ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து
ச‌த்த‌மில்லாம‌ல்

Thursday, October 22, 2009

அழகான வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு காரியம்.  ஒரு தாய் தன் மகளுக்கு தன் முகம் தெரியா நண்பர்கள் மூலம் வாழ்த்து சொல்லச் சொன்னது புதிதாகவும்  அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.

நான் ஒரு பயணம்  தொடர்பான  குழுவில்  உறுப்பினராக  இருக்கிறேன். இன்று  அந்த  email id-கு  ஒரு  mail வந்திருந்தது. தன்  மகளுக்கு  பிறந்த  நாள்  எனவும்  நண்பர்களை  வாழ்த்து சொல்லச் சொல்லியும். உடனே  வாழ்த்துக்களை தெரிவித்தேன் இரவு  1 மணியாக  இருந்த  போதும். அந்த 16 வயது பெண்ணின் குரலில் இருந்த சந்தோசம்  அழகாக இருந்தது. ரொம்ப சந்தோசம். 

Wednesday, October 21, 2009

உயிரணுச் சுவை

பல இரவுகளின் தேடல்
பெரும்பாலும் விடியலில் முடிந்துவிடுகிறது

எந்தத் தேடலும் இல்லாமல்
மறைந்து போன
ஒரு பெண்மையின் மெல்லிசை
என் போர்வைக்குள் மறைந்துள்ளது
ஒவ்வொரு இரவும்

வெந்து தணியும்
அடுக்களையின் சூட்டில்
அனைத்தையுமா அவித்து விட முடிகிறது

பரிமாறுதல் இல்லாப் பண்டமாய்
வெற்றுப் பிண்டமாய்
ஒவ்வொரு நாளும் சுவை
சேர்த்து வைத்துக் காத்திருக்கிறேன்

தவறும் ஒவ்வொரு நொடியும்
தவிப்பின் பேரமைதி யுகங்கள்

காத்திருத்தல்
பெருவெளியின் ஓரத்தில்
நிசப்தமாய் கண் சிமிட்டுகிறது

பதிந்து மறைந்து போன
நகக் குறிகள்
எதிரில் நின்று
நடந்து போன நிமிடங்களின்
பெயர்க்காரணம் சொல்கிறது

வழியும் உதட்டு ரத்தம்
நுனி நாக்கால் தடவிப் பார்க்க
உன் உயிரணுவின்
சுவையாய் உள் இறங்குகிறது

விரலழுத்தம் தாளா உடைகள்
தன்னால் வழிந்தோடி விடுகின்றன
கால்களின் நடுவே

கிழிக்கப்பட்ட தலையணைகள்
வாய் விட்டுச் சிரிக்கின்றன


மறுபடியும் விடிந்துவிடுகிறது
ஒவ்வொரு இரவும்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154

உரையாடல்




வெகு இயல்பாகத்தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்

என் வீட்டுள் நுழைந்த ஒரு நிழல் மிருகம்
பற்றி நான் வர்ணித்ததை
மிகக் கவனத்துடன் நீ கேட்க ஆரம்பித்தாய்

என் ஜன்னல் வழி நுழைந்த
அந்த மிருகம்
என் இருப்பை ஆட் கொண்டதை
உன் கண்கள் விரிய கேட்டாய்

என் வரவேற்பு அறையில்
எனக்கு மிக அருகில் அமர்ந்து
அது நாளைய தினசரியை
வரி விடாமல் படித்தது என் கண் போகும் திசை எல்லாம்

நாற்காலியில் அமர்ந்த படியே
நான் உறங்கிப் போன நிமிடத்தில்
என்னுள் என் கருவறை வாசல்
தட்டித் திறக்காமல் உள் நுழைந்தே விட்டது

அதனுடன் கை பற்றி
என் சுவற்று சிலந்தியும்
கருவறை வாயிலில் கூடு கட்டிவிட்டது

என் படுக்கையறையில் ஒளிந்திருந்த
நாய்களின் கலவியின்
நேற்றைய மிச்சத்தில் உருவான
பருந்தொன்று தனியே

என் மார்பின் நடுவே சிறகடித்துக்
கொண்டிருக்கிறது

முலைக்காம்பில் வெடித்து சிதறும்
என் முதல் பால் சுவைக்க

நம் உரையாடலின் சுவை உணர்ந்த படியே

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154

Tuesday, October 13, 2009

முடியா பயணம்

நினைவுகளின் அழுத்தத்தில்
வெடித்து சிதறும் சில கவிதைகள்

என்றோ தலை கோதி
நீ சொன்ன கனவுகள் அலை அடித்து மோதும்

என் விரல் சொடக்கெடுத்து
அழுத்தம் குடுத்து என்னுள்
நீ பதியம் போட்ட எண்ணங்கள்
தன்னால் தலை அசைக்கும்

என்று தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்

எனைக் கருவறையில் சுமக்கையில்
என்ன பேசினாய்
எனக்கான பாடல் கேட்டாயா
எனக்கான கவிதை படித்தாயா

எனக்காக நீ நடை பயின்றாயா
எதற்கான பதில் சொல்லவும்
நீ அருகில் இல்லை
எனினும் உன்னை உணர்கிறேன்

நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு கல்லிலும்
நீ பதித்த உணர்வுகள்
உன் பெயர் சொல்லி கதை சொல்கின்றன

உன் இமை மூடி
நீ நிரந்தர உறக்கம் தொடங்கிய
நிமிடம்
உன் அருகில் தலை வைத்து
சற்று உறங்க ஆசைப்பட்டேன்

அப்போது அது நடக்காமல்
போனாலும்
உன்னுடன் முடியா பயணம்
போய்க்கொண்டுதான் உள்ளேன்
நான் வாழும் ஒவ்வொரு நொடியும்

Tuesday, September 29, 2009

காற்றாய் கலந்தவன்


Sunday, September 13, 2009

கனவுகளின் காதலி

கனவுகளை சுவாசிப்பவள் நான்

கனவுகளின் வாசத்தில் வாழ்பவள் நான்
கரைந்து போன காற்றின் ஒலி ஒன்று
தானாய் சுமந்து போனது
என் கேவலை

வழியும் கண்ணீரின்
வற்றிப்போன நொடியொன்றில்
கனவொன்று கண்டேன்

கருப்பு பிரபஞ்சத்தின்
வெளியில்
கை நீட்டி வரம் கேட்டேன்
ஒற்றை சுடு நீர்
விரல் வழியே வழிந்தோடியது

சூழ்ந்த இருளின் நடுவே
திருவிழா ராட்டினமாய்
உன் நினைவுகள் வேகமாய்
சுற்றுகின்றன

நினைவு மரித்துப்போன
பிணம் ஒன்று
எரியும் சிதையின் மேல்
நர்த்தனமாய்

ஒவ்வொரு விடியலிலும்
உன் விரல் தீண்டும் நொடியில்
எனக்குள்
இந்த கனவு