Thursday, January 24, 2008

கவிதை கடக்கும் கோப்பை

பருகி எச்சில் வைத்து மிச்சமாக்கப்படுகின்றன
கடந்து போன கவிதைகள்

அதனுள் மித‌க்கும் க‌ண்ணிழ‌ந்த‌ ஈ ஒன்று
கோப்பையின் ஓர‌த்தில் நின்று
துடுப்பு தேடுகிற‌து

தான் ப‌ருகிய‌ ஒற்றைத்துளியே
ச‌முத்திர‌மென‌
ம‌ய‌க்க‌ம் கொண்டு
பான‌த்தின் வ‌ண்ட‌ல் குறையென்கிற‌து

தொலைதூர‌ விழி மூல‌ம்
கிட்ட‌ப்பார்வை பார்த்த‌ப‌டி

த‌ன் தோணி க‌ட‌க்கும்
மாயை அறியாத‌து அது

அருகில் செல்லும் க‌ப்ப‌லின்
க‌ட‌ல் மித‌க்கும் வித்தை
க‌ற்றுக்கொடுக்க‌ கையில்
கோல் எடுக்கிற‌து

எடுக்கும் கோலுக்கு ஆடும் ம‌ந்தியென‌
என் க‌விதை நினைத்து...

அது அறியாதது

கையிடுக்கின் வழி மெல்ல கசியும்
புகையாய் கவிதை

அந்திவான் நோக்கி திசையற்று
உலகை அணைத்து
பறக்கும் சேதி

2 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தோழிக்கு...,

நிறைய தனிமையும், உறவின் வலியும், வாழ்வின் புரிதலும் கொண்டவை உன் கவிதைகள்...

கவிதைகளை பற்றிய விமர்ச்சனங்கள் எழுத, கவிதையை உள்வாங்கி கொள்ளும் காலம் ஒரு முக்கியமான காரணி. சில கவிதைகள் வாழ்வனுபவத்தோடு தொடர்புடையவையாக இருக்கும்... சில கனவுகளை உள் செலுத்தி மனதில் மறைந்திருக்கும் பிம்பங்களை தொடர்பு கொள்ளும்...
தனி கவிதைகளை விட தொகுக்கபட்ட கவிதைகள் மிக சுலபமான ஆழமான அதிர்வலைகளை உருவாக்குகின்றன.. எனவேதான் தனி கவிதைகளுக்கு பின்னூட்டம் இடுவதை விட ஒரு பின்னூட்டத்தில் என் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்...

உன் கவிதைகளை படிக்கும் தருணங்களில் என்னில் விரியும் காட்சிகள் விவரிக்க இயலாத சர்ரியலிய தத்துவங்களை ஒத்து இருக்கின்றன... சில கவிதைகளில் வார்த்தைகள் மிக இயல்பான கோர்வையாய் அமைந்திருந்த போதும், சில கவிதைகளில் அவை காத்திருந்து பிரசவித்தவை போல இருக்கின்றன.

உன் கவிதைகளின் கரு ஒரு வினாடியில் உருவானதாக கருத முடியவில்லை - கரு பற்றிய ஒரு கவனத்தோடு உன் வினாடிகளை கடந்ததாக நான் கொள்கிறேன்..

தனிமையின் சுகம் - மிக அழகான தலைப்பு... தனிமை சுகமானது மட்டும் அல்ல.. நிறைய தெளிவுகளை கொடுக்கும் மகத்தான நிழல்..

"--"
கவிதை பிரசவங்களை பற்றிய வரிகள்.. ஒரு உயிரின் வடிவத்தில் நீ பார்க்கும் கவிதையின் கோணம்..

"--"
இரட்டைபிரசவ அவசரம் கவிதைகளுக்கான வார்த்தைகளா.. இல்லை.. கவிதையின் கருத்து வேகமா.. !

"--"

கவிதை ஒரு போதை.. பருகியது போதும் என நினைக்க தோன்றாத போதை.. "கவிதை கடக்கும் கோப்பை.. " யில் பார்வை அந்தி வான் நோக்கி திசையற்று நகர்கிறது.. கொஞ்சம் வலிக்கும் தொனி இருப்பினும் பெரும்பாலான கவிதைகளின் ஈரம் அதனை சமாதானபடுத்துகிறது..

"கவிதை பயணி" ஒரு சர்ரியலிச ஓவியம்... கடைசி வரிகள் உருவாக்கும் எதிர் நோக்கும் பார்வை தவிர்த்து..கவிதை சொல்லும் ஓவிய முறை .. கனவில் கண்ட காட்சிகள் மறந்து குழப்பமான மனநிலை.. .. மறுமுறை ஒரு வாசகியாக படித்து பார்.. நான் இந்த கவிதையை ஓவியமாக்கலாம் என நினைத்துள்ளேன்..

தனிமையும் நீ கடந்த அனுபவங்களும் உன் கவிதைகளில் மிக அதிகமான சிவப்பில் வெளிப்படுகின்றன.. நீ பார்த்த மனிதர்கள் தென்படுகிறார்கள்.. அவர்களுக்கான நிறங்களில்..

காமம் ஒரு அழகான உணர்வு.. எல்லா அழகுக்கு பின்னும் கொஞ்சம் வலியும் சிவப்பும் உண்டு.. உன் கவிதைகள் அதனை அற்புதமாக காட்டுகின்றன.. பாலியல் என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்த உணர்வு.. தவிப்பு என்பது தனிமையிலும் உண்டு.. காமத்திலும் உண்டு.. அதற்க்கு பால் வேறுபாடு கிடையாது... ஒரு பெண்ணிய உணர்வு தெரியும் உன் கவிதைகள் பாலியல் தத்துவங்களை கொஞ்சம் நிறம் மாற்ற முயற்சி செய்கின்றன.. நீளும் பாதை வெளியிடும் தவிப்பு, எனை தாண்டி சொல்லும் மன அழுத்தம், கண்கள் சொல்லும் குழப்பமான எதிர்பார்ப்பு, சிணுங்கல் சொல்லும் இழப்பு, கல்லறை காமம் சொல்லும் வலி, சாட்சி சொல்லும் மவுனம்.. எல்லாம் சில வரிகள் சொன்னாலும் அழுத்தமான உணர்வுகள் உருவாக்குகின்றன..

ஒற்றை சிறகு பறவை ஒரு கணப்பொழுது பற்றி பேசுகிறது - அது கடக்கும் கணம் நோக்கி கவனித்து இருக்கும் மனது.. சிறகு என்பதை மனமாக கொண்டால் அதன் அலைபாயுதலை கவிதையின் கருவாக கொள்ளலாம்..

தனிமையை பற்றிய கவிதைகள், உறவுகளை பற்றிய கவிதைகள் இரண்டும் அடிப்படையில்
தொடர்புள்ளவை.. உறவுகளின் ருசி இல்லாதல் தனிமையின் அறிமுகமும் இல்லை - அது சுவைக்கபடுவதும் இல்லை.

உண்மை முகம் - எல்லா காதல்களின், உறவுகளின் நிஜம்.. நீயும் நானும் அல்ல.. யாருக்கும் இருக்கும் நிஜம்..
யாரிடம் இருந்தும் பெறப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நீ சொல்லும் இரட்டை நாக்கு வழிமுறையிலேயே அமைந்து இருக்கின்றன.. உண்மை எனும் ஒற்றை நாக்கு மட்டும் வலிமையோடு இருப்பின் .. பல உறவுகள் நிஜம் தாங்கா வெப்பத்தில் கருகி விடுகின்றன..

உறவு என்பது ஆண் பெண் பேதம் இல்லாதது - இதன் தத்துவம் அறிய வாழ்க்கை கொஞ்சம் வாழ்ந்து பார்க்கபட வேண்டும்.. நானும் அவனும் மற்றும் என் நீ ஆகிய கவிதைகள் உன் பார்வையின் கூர்மையை .. வாழ்க்கை சார்ந்து அறிய வைக்கின்றன..

கவிதைகளில் வாழ்வனுபவம் வெளிப்படுவது என்பது ஒரு வகையில் மனநோய்... தனக்கு தானே பேசி கொள்ளும் மனம், நிறைய சுவாசிக்கும் மனம் வெளியிடும் தேடல்கள்தான் கவிதைகளின் வேர்.

உன் கவிதை வரிகளை பற்றி இன்னும் பேச வேண்டும்... கொஞ்சம் காலமும் வேண்டும் - நிறைய புரிதலும் வேண்டும்..
பாலியல் மற்றும் தனிமை - அதன் வலி, எதிர்பார்ப்புகள், கடந்து வந்த பாதை, எதிர் நோக்கி காத்திருக்கும் நிறம் அறியாத எதிர்காலம்.. உன் கவிதைகள் இன்னும் பேச வேண்டும் தோழி. வாழ்க்கை இன்னும் நிறைய எழுதபடாத நிறங்களில் விரிந்து இருக்கிறது. இன்னும் படி, இன்னும் பார், இன்னும் அனுபவி, இன்னும் வலி கொள், இன்னும் உறவின் சுகம் காண், இன்னும் தனிமை கொள் - மனசு முழுக்க வாழ்வின் அனுபவங்கள் நிறையும் போது... கவிதை வடி.. அது உன்னை இன்னும் சுகமாக்கும்..

இன்னும் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்..

உன் தோழன்..

ஜெயபாலன் said...

தான் ப‌ருகிய‌ ஒற்றைத்துளியே
ச‌முத்திர‌மென‌
அனுராதா உங்கள் கவிதைகள் மேம்பட்டு மேலும் ஒரு தளத்துக்கு கவடு வைக்க முனைகிறதை உணர்கிறேன். தொடர்ந்து மேலிம் மேலும் விரியும் கலைஞர்களின் பிரபஞ்சத்துக்குள் முன்னேறி வருக என வாழ்த்துகிறேன்