Thursday, November 12, 2009

பெண்மைச் சான்றிதழ்
















காதலாகியும் கசிந்துருகிக்
காண்பித்தாயிற்று
ஆயினும்
கசியும் உதிரம் மட்டுமே
என் கற்பை நிரூபிக்குமென்றால்


போடா

(- ஆனந்த விகடனில் படித்த ஒரு கேள்வி பதிலுக்கான எனது பதில்)

Tuesday, November 10, 2009

மரணத்தின் வாசனை

ஒரு காற்றைப் போல கிளம்புகிறது
மரணத்தின் வாசனை



காரணங்களை அடுக்கி
அனைவரும் கிளம்பிய பின்
காலியாக இருக்கும்
ஒரு கிராமத்தின்
சிதிலமான வீட்டின் திண்ணைகளில்
சற்றே இளைப்பாறுகிறது
களைப்பு தீர

திண்ணைகள் நிறைய கதைகள்
சேர்த்து வைத்திருக்கின்றன

பல மதியங்களில் உணவுக்கு
பின்னானபொழுதுகளில்
திண்ணைகள் கதைகள்
சேமிக்கத் துவங்குகின்றன

விக்கிரமாதித்தன் கதைகளில்
தொடங்கி
தெருமுனை பால்காரனுக்கும்
எதிர்வீட்டு பெண்ணுக்கும் இருந்த
உறவு வரைக்குமான கதைகள்
கால் முளைத்து
ஜன்னல் கம்பி பிடித்து
தொங்கி கொண்டிருக்கின்றன

அடர்ந்த மழைச்சாரல்
உடைந்த ஜன்னல் சதுரங்கள்
வழியாக நினைவுகளை
சிதறிச் செல்கிறது

மதிய நேர மரங்கள் சற்று
சுவாரஸ்யம் குன்றியவை
எனினும் அவை சுமந்து நிற்கும்
அந்த ஊரின் தோல்விகள் மற்றும் வலிகளை

கயிற்றுக் கட்டில்களின் கால்கள்
அழுகிய நோயினால்
பீடிக்கப் பட்டிருக்கிறது
உதிரும் தோல் தாங்கி

மரணம் மனிதருக்கு
மட்டுமானதில்லை

வெட்டப்பட்ட மரங்களிலும்
இடிந்த அரைச் சுவற்றிலும்
படர்ந்த சிலந்தி வலையிலும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் வாசனை

Friday, November 6, 2009

ஒரு பதிவு

http://payanangalil.blogspot.com/2009/11/blog-post.html

குறியீடுகள்

பாவத்தின் குறியீடுகள்
ஒவ்வொரு நாளும்
அகராதியின் புது அர்த்தம் சுமக்கும்

காதலின் வெளிப்பாடாய் மட்டுமே
விரிந்து சுருங்கும்
யோனி காமத்திலும்
பாவத்தின் எண்ணிக்கையில் முதலாவதாக
இருந்த போதும்

அளவுக்கு அதிகமான பசி
வயிற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை
நம்மில் பலருக்கு
எனினும் உண்டி சுருங்க வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டு விட்டது
என் தோழியருக்கு

பொறாமை பொதுவாய் மாற்றப்பட்டுவிட்டது
கலவிச் சுகம் பொதுவில்
இயக்கத்தின் எண்ணிக்கையின் அளவில்
பேசப்படுகையில்

சோம்பலில் மட்டுமே
விட்டுக் கொடுக்கிறான்
என் கனவுக் காதலனும் கூட
தன் ஆண்மையின் அதிகாரத்தை
சரிந்துப் படுத்து

அளவுக்கு மிஞ்சியக் காதலைக்
காட்டுவதைச் சொல்லி
என் ஆசைக் கூட்டின்
ஒவ்வொரு சிறகையும்
பிய்த்துப் போடுகிறாய்
இதழோரம் நகைக் கூட்டியபடியே
அளவுக்கு மீறினால்
அதுவும் பாவக் கணக்குகளின் எண்ணிக்கையை
அதிகரிக்குமாம்

இரவில் வந்து வேகமாய்க்
கூடி
உடன் மறைந்து போகும்
உனக்கெங்கே புரியப் போகிறது
உனக்காய் நான் சேர்த்து வைக்கும்
என் பரிசுகள்

வெறுப்புக் கொப்பளித்துத்
தலைக்கேறும் நரம்புகளின் வழியே

பாவத்தின் எண்ணிக்கையில்
கூடுதல் குறைதல் இருக்கலாம்
ஆனால் குறியீடுகள் சுமந்து
உண்டான தழும்புகள்

Thursday, November 5, 2009

துரோகத்தின் நிறம்

துரோகத்தின் நிறம்
இதுவரை புரிபடவில்லை எனக்கு

சமீபத்தில் எனைச் சுற்றி
கருப்பாய் ஒரு மேக மூட்டம்
கவிழத் தொடங்கியது
மேகத் திரை விலக்கி
எட்டிப் பார்த்தேன்

பார்க்கும் இடமெல்லாம்
ரத்த முட்கள்
வேலியாய்

என்றோ சிந்திப் போன
மழைத் துளி ஒன்று
இன்று என் மேல்
அமிலமாய்
என் சதை தின்ற படி

விடியலின் ஆரம்பத்தில்
என் உடல் எங்கும் கவியும்
நீல வெளி


தன் முகம் மறைத்த
துரோகம் கண் விழித்து
என் அருகே
படுத்து உறங்கத் தொடங்கியது
இன்று அதிகாலை

நம்பிக்கை பொய்த்துப் போன
நீள் பயணத்தின் முடிவில்
உயிர் அறுக்கின்றன
சில உறவுகள்

வார்த்தைகள் இரட்டைப் பிரசவ
வலியோடு வெளிவருகின்றன

நம்பிக்கை வெறும்
எழுத்தோடு நின்று விடுகின்றது

மேல் நோக்கி வளரும்
ஒவ்வொரு துளிரும்
மரித்த சிசுவின் வாசம் சுமக்கிறது

Tuesday, November 3, 2009

உறவாக

மிக நீண்ட நாட்களாய்
மங்கியதாய் ஒரு நினைவு என்னுள்
தங்கியுள்ளது

வாகனங்களற்ற ஒரு சாலையில்
மெல்லிய நீரோடையின்
சாரல் சத்தத்தோடு
உன் விரல் பிடித்து
தொலை தூரம் நடப்பதாய்.

எப்போது இந்த நினைவு
என்னுள் பதிந்தது எனக்கு
இந்த நிமிடம் வரையில்
தெளிவாகவில்லை

ஆனால் உண்மையில்
நான் யார் என்பதோ
என் உணர்வு உன்னைச் சுற்றிப்
பின்னப்பட்டது என்பதோ
உனக்கு தெரியாது

உன் பாதம் பின் பற்றி
என் சின்னஞ்சிறு பாதம்
எடுத்து வைத்து நடக்க
ஆசைப்பட்டிருக்கிறேன்

வாய்த்தது என்னவோ ஊமைக் காயங்கள்
மட்டும்தான்

உனக்கு வழி காட்ட
என்னால் இயலாது என்ற
ஒரு வார்த்தையில் வெகு தூரம்
விலகி நின்று கொண்டாய்

உன்னால் மட்டுமே நான்
வழி நடத்திச் செல்ல
கனவு கண்டது
 உன்னால்
உணர முடியாமல் போய்விட்டது
வசதியாக

உனக்கான எல்லையில்லா
வானம் விரித்து வைத்துக் காத்திருந்தேன்
ஆனால் உன் சிறகுகளை
நீயே வெட்டிக்கொண்டாய்
சூழ்நிலைக் கைதி
என்ற பெயர் சூட்டிக்கொண்டு

என்றாவது வெளிவருவாயா
எனக்கும் உறவாக?

Saturday, October 31, 2009

கேள்விகள்

ஒவ்வொரு நாளும் கேள்விகள்
நமைத் துரத்தும்

ஒரு கருப்பு நாளில்
தலை மேல் இறங்கும்

எங்கிருந்தோ கவ்விய
ஒற்றை மாமிசத்துண்டு ஒன்றை
அன்றுதான் அணிந்திருந்த
புதுச் சட்டையின் மேல்
அபிஷேகம் செய்யும்

ஒதுங்க இடமில்லா சாலையின்
நடுவில் போகையில்
நம் மேல் சேறடித்துப் போகும்
சில கேள்விகள்

தனிமையில் அமர்ந்திருக்கும்போது
காதோரம் ரீங்காரமிடும்
எங்கிருந்தோ பறந்து வரும்
கேள்விகள்

எடுத்துக் கொஞ்ச
எச்சில் உமிழ்ந்துவிட்டு போகும்
சில கேள்விகள்

 கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்

 சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்

உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது
கேள்விகளே