Thursday, January 24, 2008

கவிதைப்பயணி

எடுப்பார் கைப்பிள்ளையாய் சிறு சிணுங்கலுடன்
தனது பயணத்தின் இலக்கு நோக்கி
புகைவிட்டபடி போய்க்கொண்டிருக்கிறது
வார்த்தைப் பெட்டி.

நகர்ந்து போன கள்ளிச்செடியொன்றின்
அரும்பொன்று மொட்டவிழ்த்து
தலை அசைக்கிறது தாண்டிப்போன காற்றுக்கு
முத்தமிட்டு

தூர நின்ற ஒற்றைப் பனைமரம்
தனது கள்ளை இறக்கி வைத்து
எதிர்நோக்கி நிற்கிறது
வார்த்தை போதைக்காய்.

பனைக்கள் நக்கி
மகரந்த சேர்க்கை மறந்து
தள்ளாடி
மலர் மலராய் தாவிச் செல்கிறது
திசை மறந்த வண்ணத்துப்பூச்சியொன்று

சிரித்து வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது
என் சொல் அமர்ந்த
அரளிப்பூவொன்று..

அதனோடு சேர்ந்து காயும்
காத்திருக்கிறது
தனை பறிக்கும் வளைக்கையொன்றுக்காய்

No comments: