Tuesday, November 10, 2009

மரணத்தின் வாசனை

ஒரு காற்றைப் போல கிளம்புகிறது
மரணத்தின் வாசனை



காரணங்களை அடுக்கி
அனைவரும் கிளம்பிய பின்
காலியாக இருக்கும்
ஒரு கிராமத்தின்
சிதிலமான வீட்டின் திண்ணைகளில்
சற்றே இளைப்பாறுகிறது
களைப்பு தீர

திண்ணைகள் நிறைய கதைகள்
சேர்த்து வைத்திருக்கின்றன

பல மதியங்களில் உணவுக்கு
பின்னானபொழுதுகளில்
திண்ணைகள் கதைகள்
சேமிக்கத் துவங்குகின்றன

விக்கிரமாதித்தன் கதைகளில்
தொடங்கி
தெருமுனை பால்காரனுக்கும்
எதிர்வீட்டு பெண்ணுக்கும் இருந்த
உறவு வரைக்குமான கதைகள்
கால் முளைத்து
ஜன்னல் கம்பி பிடித்து
தொங்கி கொண்டிருக்கின்றன

அடர்ந்த மழைச்சாரல்
உடைந்த ஜன்னல் சதுரங்கள்
வழியாக நினைவுகளை
சிதறிச் செல்கிறது

மதிய நேர மரங்கள் சற்று
சுவாரஸ்யம் குன்றியவை
எனினும் அவை சுமந்து நிற்கும்
அந்த ஊரின் தோல்விகள் மற்றும் வலிகளை

கயிற்றுக் கட்டில்களின் கால்கள்
அழுகிய நோயினால்
பீடிக்கப் பட்டிருக்கிறது
உதிரும் தோல் தாங்கி

மரணம் மனிதருக்கு
மட்டுமானதில்லை

வெட்டப்பட்ட மரங்களிலும்
இடிந்த அரைச் சுவற்றிலும்
படர்ந்த சிலந்தி வலையிலும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் வாசனை

7 comments:

நேசமித்ரன் said...

nallaa irukku aana
innum nallaa irundhirukkalaaam

Cable சங்கர் said...

நேசமித்ரன் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்..

அன்பேசிவம் said...

அனு, சூப்பர். எஸ்.ராவின் கட்டுரைகளுக்கு கவிதையெனும் கால் முளைத்து நடப்பதுபோல் இருக்கிறது, உங்கள் கவிதை நடை.
நிறைய எழுதுங்க...

லெமூரியன்... said...

\\வெட்டப்பட்ட மரங்களிலும்
இடிந்த அரைச் சுவற்றிலும்
படர்ந்த சிலந்தி வலையிலும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் வாசனை ...//

மரணத்தின் வாசனை என்ற தலைப்பை பார்த்த உடனே....அதைப் பற்றி அடர்த்தியான பதிவை உள்ளடக்கிறுக்க்கும்னு நெனச்சேன்....ஆனா சற்று இலகுவாக சொல்லிருக்கீங்க...

நல்லருக்கு.

Dr.Rudhran said...

திண்ணைகள் நிறைய கதைகள்
சேர்த்து வைத்திருக்கின்றன good keep- going

sathishsangkavi.blogspot.com said...

//கயிற்றுக் கட்டில்களின் கால்கள்
அழுகிய நோயினால்
பீடிக்கப் பட்டிருக்கிறது
உதிரும் தோல் தாங்கி//

அழகான வரிகள்...........

பா.ராஜாராம் said...

ஐயோ!

வந்தனம் அனு.