Tuesday, October 13, 2009

முடியா பயணம்

நினைவுகளின் அழுத்தத்தில்
வெடித்து சிதறும் சில கவிதைகள்

என்றோ தலை கோதி
நீ சொன்ன கனவுகள் அலை அடித்து மோதும்

என் விரல் சொடக்கெடுத்து
அழுத்தம் குடுத்து என்னுள்
நீ பதியம் போட்ட எண்ணங்கள்
தன்னால் தலை அசைக்கும்

என்று தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்

எனைக் கருவறையில் சுமக்கையில்
என்ன பேசினாய்
எனக்கான பாடல் கேட்டாயா
எனக்கான கவிதை படித்தாயா

எனக்காக நீ நடை பயின்றாயா
எதற்கான பதில் சொல்லவும்
நீ அருகில் இல்லை
எனினும் உன்னை உணர்கிறேன்

நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு கல்லிலும்
நீ பதித்த உணர்வுகள்
உன் பெயர் சொல்லி கதை சொல்கின்றன

உன் இமை மூடி
நீ நிரந்தர உறக்கம் தொடங்கிய
நிமிடம்
உன் அருகில் தலை வைத்து
சற்று உறங்க ஆசைப்பட்டேன்

அப்போது அது நடக்காமல்
போனாலும்
உன்னுடன் முடியா பயணம்
போய்க்கொண்டுதான் உள்ளேன்
நான் வாழும் ஒவ்வொரு நொடியும்

3 comments:

ராஜ சேகர் said...

தாய்மையின் அடையாளமாக தாய்க்கு ஒரு அர்ப்பணமாக இக்கவிதை எனக்கு தோன்றுகிறது! இதை யார்க்கு வேண்டுமாயின் ஒப்பிடமுடிந்தாலும் தாய்க்கு மட்டுமே வெகு சிறப்பாய் பொருந்துகிறது!

Trails of a Traveler said...

Excellent one!

நேசமித்ரன் said...

அட்டகாசம்

எப்போதும் வசீகரிப்பவையாக இருந்து வருகின்றன எனக்கும் தாய் உடனான உரையாடல்கள்