Tuesday, October 27, 2009

சிகண்டி

கல்லாலும் சொல்லாலும்
எனை நானே அடித்து
இறுகிப் போனவள் நான்

நிராகரிப்பின் உச்சம்
உனக்கான சாபமாய்
மாறிப்போகும் என்னுள்

பிரித்து எடுத்து கவர்ந்து
சென்றபோதே
உணர்ந்திருக்க வேண்டும் நீ
தவறிவிட்டாய்

உனக்காக நான் அமைக்கப் போகும்
முள் படுக்கை
உன் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்குள்
ஒளிந்திருக்கும்

ஒவ்வொரு பௌர்ணமி இரவும்
காற்றுக் குதிரை ஏறி
விரைகிறேன் இருட்டுக் காட்டில்

தங்கி விடக் கெஞ்சும்
உடலை விட
உனக்கான உக்கிரம் அதிகம் துடிக்கிறது

கையை மனையாக்கி
உடம்புக் கிடத்திப்
படுத்திருக்கிறேன்

சர்ப்பம் ஏறிப் போக
என் கருவறை வாகாகக்
காத்திருக்கிறது

உடலில் ஏறும் விஷம்
தலைக்கேறிக் கிரங்கிப்
பதுங்கியிருக்கிறேன்

போர்க்களத்தில் எதிரில் நிற்கும்
எதிரி எளிதில் அடையாளம்
தெரிந்துவிடுகிறான்

உள்ளில் வாழும் உன்னை
அடையாளம் காணத்தான்
நாளாகிப் போய்விட்டது

எனினும் உன் உயிரறுத்துக்
குருதி குடிக்கும்
என் பெண்மை

பொறுத்திரு

8 comments:

நேசமித்ரன் said...

பிரம்மாண்டம் !!!
உலுக்கி போடுகிறது மொழி பயணிக்கும் வெளி

முரளிகுமார் பத்மநாபன் said...

சிகண்டி - என்ன தெரியவில்லையே?

//போர்க்களத்தில் எதிரில் நிற்கும்
எதிரி எளிதில் அடையாளம்
தெரிந்துவிடுகிறான்

உள்ளில் வாழும் உன்னை
அடையாளம் காணத்தான்
நாளாகிப் போய்விட்டது

எனினும் உன் உயிரறுத்துக்
குருதி குடிக்கும்
என் பெண்மை

பொறுத்திரு///
அருமையான வரிகள், அனு தொடருங்கள், :-)

Cable Sankar said...

சிகண்டி.. என்றால் உன்மத்தம் பிடித்தவளென்று அர்த்தமா?

வால்பையன் said...

டிக்‌ஷ்னரியும் கொடுத்துவிட்டாள் உதவியாக இருக்குமே!

தோழி said...

Sihandi - Small write up

அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை.


ithu varalattru kathai manthar mattum illamal ovvoru naalum ovvoru pennalum santhikka koodiya nadaimuriayaga ullathu. piraroruvanal kavarnthu sellap paduvathum, athai othuk kondu vaazathodanguvathum aanal en sihandi urumeen varak kathirukkiral.

நட்பு said...

ஒரு வரலாற்று பதிவை கொண்டு இத்தகைய கவி செய்ய சங்க கவிகளுக்கு கூட தோன்ற வில்லையே தோழி..

மேலும் இது ஒரு பெண்ணின் வீரம் பற்றிய கவிதை என்பதை விட ஒரு பெண் உள்ளத்தே கொண்ட வன்மத்தின் உறுதியை நெஞ்சுரத்தை பற்றியே உரைப்பதாக தெரிகிறது..

Satish Nagasubramaniam said...

SIMPLY SUPERB ANU. TREKKING KU VARUMBODHU, IPPADI UNGALUKULLA ORU POET IRUKARADHA SOLLAVE ILLAYE :)

அகநாழிகை said...

தோழி,
கவிதை வாசித்தேன். நன்றாக இருக்கிறது. கவிதையின் தலைப்பிற்கு இருக்கும் மொழியாளுமை கவிதையில் குறைவாக இருப்பதாக உணர்கிறேன். உங்களது பல கவிதைகள் ரசித்து வாசித்திருக்கிறேன்.
00
சிகண்டி என்பதற்கு இதிகாசப் பொருள் தந்திருக்கிறீர்கள். சிகண்டம் என்றால் மயில் தோகை என்று பொருள். சிகண்டி என்பது பேடு என்ற மயிலை குறிக்கும் சொல். ‘சிக‘ என்பதற்கு உயர்ந்த என்ற அர்த்தம் உள்ளது. (சிகரம்) உயர்வானவள் என்ற பொருளில் அம்பையை சுட்டியிருக்கலாம்.

- பொன்.வாசுதேவன்