Tuesday, December 15, 2009

பட்டாம்பூச்சி வாழ்க்கை

















வளைந்து நெளிந்து செல்லும்
பாதையாகத்தான் போய்க் கொண்டிருந்தது
வாழ்க்கை.

திடீரென வந்த ஒரு திருப்பத்தில்தான்
உணர்ந்தேன் வளைவும் நெளிவும்
கடைசியாக முடிந்த வடிவம்
கேள்விக்குறி

வானவில் வர்ணம் என் மேலும்
அடிக்கப்படுகிறது
இரவு விளக்குகளின் ஜாலத்தில்
எனில்
பகல் நேர வர்ணம் என்னவோ
சிவப்பாக மட்டும் இருக்கிறது


ஒவ்வொரு இரவின் முடிவிலும்
பொங்கிப் பிரவாகமாகியது
பல காதல்கள்

நான் பத்தினியாவதும் பரத்தையாவதும்
பக்கத்தில் படுப்பவனின்
போதை நிலை பொறுத்தே இருக்கிறது

ஒரு நாள் சீதை -
                 அடிக்கடி தீக்குளிக்க வேண்டியதில்லை எவனுக்காகவும்
ஒரு நாள் கண்ணகி -
                 கால் சலங்கை கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும் 
ஒரு நாள் மாதவி -
                துறவியாக வேண்டியதில்லை வந்து போகும் எந்த நாடோடிக்காகவும்

இப்படியே இருந்து விட்டு போகிறேனே
ஏன் கல் எறிகிறாய்
காதலின் பெயர் சொல்லி

வர்ணிப்பின் எல்லையைத் தொட்டு விட்டு
என்னையும் தொட்டுவிட்டு மட்டும்
போன பலரோடு நீயும்
போய்விடு

வண்டி நிறைய பாரம் ஏற்றி உள்ளேன்
காதலின் பெயர் சொல்லி
இனிமேல் கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்

மரத்தும் மறந்தும் போன
வாழ்வின் ஸ்பரிசங்கள்
சவமாய்ப் போன பிறப்புகள்

நான் இறக்கும்  தருணத்தில் மட்டும்
என் தலையணை தூக்கிப் பார்

உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல்  நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன்

காரணம் சொல்லி கடந்து போனாய்
நான் உன்னுள் காற்றாய் கலந்து
போனதறியாமல்

இன்னும் எத்தனையோ காதல்
வைத்திருக்கிறேன்

உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்

16 comments:

லெமூரியன்... said...

\\வண்டி நிறைய பாரம் ஏற்றி உள்ளேன்
காதலின் பெயர் சொல்லி
இனிமேல் கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்....//

வலிகளின் உச்சமான விரக்தியின் வெளிப்பாடு...

\\உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன் .......//

காதல் இறைஞ்சலுடன் இறுதி வரை.......

வழக்கத்தை விட அதிகப் படியான வெப்பமும் ஆக்ரோஷமும்..........
அதிர்வுகளை சுமந்தபடியே மனதில் இன்னும்.....!

அனு??!

ராஜ சேகர் said...

உங்களுக்கு மட்டும் எப்படி வலியும் விரக்தியும் இத்தனை சுலபமாய் வருகிறது? வேதனைக்கு நீங்க தூரத்து சொந்தமா?
என்னவோ போங்க.. நீங்க எத சொன்னாலும் படிக்கறப்போ ஒரு பாதிப்ப உண்டாக்குது..

Dr.Rudhran said...

இன்னும் எத்தனையோ காதல்
வைத்திருக்கிறேன்...மீண்டும் மலர்வேன்...impressive. keep writing

Cable சங்கர் said...

வழக்கமான வலி மிகுந்த விரக்தியின் உச்சபட்ச வரிகள்..இன்னும் எதிர்பார்க்கிறேன்.:)

இராஜ ப்ரியன் said...

நல்ல கவிதையென்று சொல்வதா
இல்லை உணர்ச்சி குழம்புயென்று சொல்வதா ............. !

இராஜ ப்ரியன் said...

நல்ல கவிதையென்று சொல்வதா
இல்லை உணர்ச்சி குழம்புயென்று சொல்வதா ............. !

அன்பேசிவம் said...

கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்///

வெகு சுலபமான வார்த்தை பிராவாகங்கள்.

//பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்//
காதல் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ?


பெண்ணின் மெல்லிய மனதை படம் பிடித்துக்காட்டும், கதை+விதை=கவிதை.

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

sathishsangkavi.blogspot.com said...

//ஒவ்வொரு இரவின் முடிவிலும்
பொங்கிப் பிரவாகமாகியது
பல காதல்கள்உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான் என் வாழ்வியல் நடனத்துக்கான ஜதி சேர்த்துள்ளேன்//

உங்கள் கவிதை வரிகள் எப்பவுமே ஒரு இன்ப வழியை ஏற்படுத்துகின்றது... இன்றும் அப்படியே...........

S.A. நவாஸுதீன் said...

///உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்///

மரண வலி.

ரொம்ப நல்லா இருக்கு தோழி.

பூங்குன்றன்.வே said...

மிக அழகான கவிதை..ஆனால் பல கதைகளை சொல்கிறதே !!!

மகா said...

//உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல் நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன்//

ஏங்க அநியாயத்திற்கு சோகத்த கவிதையில் தூவி இருகின்களே .....

வாழ்த்துக்கள்....

நேசமித்ரன் said...

:(

Jerry Eshananda said...

சிறகடித்து பறக்கிறது கவிதை.

Shangaran said...

ஆகச் சிறந்த கவிதையொன்றை படித்த திருப்தி.

நட்புடன்,
சங்கர்
http://shangaran.wordpress.com

உத்தண்டராமன் said...

//நான் இறக்கும் தருணத்தில் மட்டும்
என் தலையணை தூக்கிப் பார்

உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல் நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன் //

மிகவும் சிறப்பு .. சேமித்து வைத்த காதலின் வலி ..அனுபவிக்க சுகம் ..படிக்க அற்புதம் ..

// உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன் //

கல்லறை தொட்ட பின்னும் ஏங்கும் ஆசை .. சொல்ல வார்த்தை இல்லை .. தொடருந்து எழுதவும்

சுரேகா.. said...

//உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்திவைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்//

அற்புதமான வரிகள்..! ஜீனியஸ்ங்க நீங்க!



திரு.நட்பு!

உங்கள் பின்னூட்டத்தை தேடித்தேடி படிக்கிறேன்..! :)