Thursday, October 9, 2008

மிச்ச சிலிர்ப்பு

எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக‌
சில சிலருக்காக‌
ப‌ல‌ என‌க்காக
‌மிக‌ப்ப‌ல‌ உன‌க்காக‌

ம‌ன‌துள் ம‌ட்டுமே உற‌வாடி
விளையாடிய‌ ப‌ல‌ க‌விதைக‌ள்
ம‌ன‌தோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த‌
பல‌ வார்த்தைக‌ள்

இன்று
தோளில் இருந்து ந‌ழுவி
இடை விட்டு இற‌ங்கிவிர‌ல் பிடித்து
ந‌ட‌ந்து ப‌டி ஏறி
உன் வீட்டுக்க‌த‌வு த‌ட்ட‌த்தொட‌ங்கி விட்டது

ஒவ்வொரு நாளும் க‌த‌வு
திற‌க்க‌ப்ப‌டும் நேர‌த்துக்காக‌

திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக

ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக

உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை

நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்

தழும்புகளின் ஈரப்பிசுபிசுப்பு
இன்னும் கைகளில்
காயாமல்

காயத்தின் ஒவ்வொரு கீறலிலும்
நம்மின் முதல் முத்தத்தின்
சுவடுகள்

என்னுள் மின்சாரம் பாய்ச்சிய
காற்றுடன் கூடிய
உதடுகளின் அணைப்பு

இன்றும் மிச்சமாய்
எனக்குள் சிலிர்க்கும்
மிருகமாய்...





3 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

சின்னச் சின்ன ஹைகூ கவிதை வடிவங்களின் கோர்வை போல இயல்பான கவிதை...

இருவருக்கான அன்புப் பரிமாறல்களை அழுத்தமாகச் சொல்வதன் மூலம், "சிலிர்க்கும்
மிருகமாய்..." மாறிய உள்ளுணர்வை நம்முன் கண்ணாடி போல காட்டும் அழுத்தமான கவிதை! அருமை!

butterfly Surya said...

நல்லாயிருக்கு. நிறைய எழுதவும்.

வாழ்த்துக்கள்.

நன்றி.

Jerry Eshananda said...

வார்த்தைகள் வரவில்லை,இந்த வலியை பிரதிஎடுப்போமே,[புத்தகமாய்]கவிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைப்பீர்களா?.