வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை
தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்
எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்
வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே
எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்
மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன்
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது
செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது
சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்
என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்
நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி
நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்
காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்
கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்
மனிதம் தேடி தவம் தொடர்கிறது